​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜஸ்தானில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பு

Published : Dec 07, 2018 12:32 PM

ராஜஸ்தானில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பு

Dec 07, 2018 12:32 PM

இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பகல் 11மணி நிலவரப்படி 22 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

இராஜஸ்தானில் 199தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாஜகவும் காங்கிரசும் 130தொகுதிகளில் நேருக்குநேர் போட்டியை எதிர்கொண்டுள்ளன. மொத்தம் 51ஆயிரத்து 687வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண்களுக்கு மட்டுமான 259சாவடிகளில் வாக்குப்பதிவு அலுவலர்கள், பாதுகாப்புக்கான காவலர்கள் என அனைவருமே பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜலாவரில் பெண்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே வாக்களித்தார். மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் ஜெய்ப்பூரின் வைசாலிநகரில் வாக்களித்தார்.

காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் ஜோத்பூரில் வாக்களித்தார். மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் பிக்கானீரில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் காத்துநின்று வாக்களித்தார். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் வரிசையாக நின்று அமைதியாக வாக்களித்து வருகின்றனர். 11மணி நிலவரப்படி 22விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜோத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த கஜ் சிங்கும் அவர் மனைவியும் சர்தார்புரா தொகுதியில் வாக்களித்தனர். ஜலாவரில் 97வயதான நாகேந்தர் சிங் சவுகான், 85வயதான அவர் மனைவி யுவராஜ் குவர் ஆகியோர் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர். இதேபோல் ஜோத்பூரில் 96வயதான பெண் வாக்களித்தார்.

சிகர் மாவட்டத்தில் பத்தேபூர் என்னுமிடத்தில் வாக்குச்சாவடி அருகே இருகுழுவினர் மோதிக்கொண்டதில் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால் அந்த வாக்குச்சாவடியில் அரைமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. காவல்துறையினர் வந்து வன்முறையாளர்களை விரட்டியடித்தபின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.