​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சை பெரிய கோவிலில், வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு

Published : Dec 07, 2018 10:59 AM

தஞ்சை பெரிய கோவிலில், வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு

Dec 07, 2018 10:59 AM

தஞ்சை பெரியகோவிலில் ஸ்ரீஸ்ரீரவி சங்கரின் வாழும் கலை அமைப்பின் ஆன்மீ பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 

தஞ்சை பெரிய கோவில் தெற்குப் பிரகாரத்தில் வாழும் கலை அமைப்பு சார்பில் விஞ்ஞான பைரவம் என்ற பெயரில் ஆன்மீக பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நாளை காலை மாற்றும் நாளை மாலை என மூன்று நேரங்களில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு மத்திய தொல்லியல் துறையின் அனுமதி பெற்றுள்ள வாழும் கலை அமைப்பு மாநில அரசின் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

தஞ்சை பெரிய கோவிலில் தென்னக பண்பாட்டு மையம், கலை பண்பாட்டுத்துறை, இந்து அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் ஆகியவற்றைத் தவிர தனியார் நிகழ்ச்சிகளோ, வணிக நோக்கம் சார்ந்த நிகழ்ச்சிகளோ அனுமதிக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது.

 

மத்திய தொல்லியல் துறையும் சிறிய அளவில் பந்தல் அமைக்க வேண்டும், மக்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது, கட்டணம் வசூலிக்கக் கூடாது திறந்தவெளியில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ள நிலையில் வாழும் கலை அமைப்பின் சார்பில் மக்கள் கோவிலை சுற்றி பிரகாரப்பதையை அடைத்து மிகப் பிரம்மாண்ட அளவில் பந்தல் போடப்பட்டுள்ளதோடு, அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பு நடத்தும் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவில் பழமையும், பாரம்பரியமும் மிக்க கோவில் என முறையீடுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பை பாதுகாக்க தவறும் நடவடிக்கை என்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் யமுனை நதிக்கரையில் மாசு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர் என்றும் கூறப்பட்டது இதனை அவசர வழக்காக ஏற்கவும் கோரப்பட்டது.

இதையடுத்து மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் பிற்பகல் 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய கோவில் உரிமை மீட்புக் குழுவினர் ராஜராஜ சோழன் சிலை முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பேரணியாகச் செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும் பெரிய கோவில் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.