​​ ராஜஸ்தான் பெண் பலாத்காரம்... 2 பேர் சிறையில் அடைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜஸ்தான் பெண் பலாத்காரம்... 2 பேர் சிறையில் அடைப்பு

Published : Dec 07, 2018 7:28 AMராஜஸ்தான் பெண் பலாத்காரம்... 2 பேர் சிறையில் அடைப்பு

Dec 07, 2018 7:28 AM

கும்பகோணத்தில், அபயம் தேடி நின்ற ராஜஸ்தான் மாநில இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியில் வேலைக்கான பயிற்சியில் சேர்வதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த 2ஆம் தேதி நள்ளிரவில் அங்கு வந்தார். கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வெளியே ஆட்டோ ஒன்றை பிடித்த இளம்பெண், தாம் தங்க வேண்டிய ஹாஸ்டலின் முகவரியைக் குறிப்பிட்டு அங்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், அவரை நீண்டநேரம் ஆட்டோவில் வைத்து சுற்றிய ஓட்டுநர், பின்னர் சாக்கோட்டையில், ஆள் அரவம் அற்ற, இருட்டான பகுதியில், இறக்கிவிட்டுச் சென்றுவிட்டான். சிறிதுநேரத்தில் அங்கு வந்த செட்டி மண்டபத்தைச் சேர்ந்த தினேஷ், வசந்த் ஆகிய 2 இளைஞர்கள், தாங்கள் உதவுவதாக கூறி, அவரை அழைத்துச் செல்வதுபோல், கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், தங்கள் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய 2 பேரை அழைத்து, அந்த பெண்ணை மேலும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை ரயில்வே போலீஸ் மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் கூறியும், அதை அவர்கள் விசாரிக்காமல், அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து, வங்கி அதிகாரிகள், தஞ்சை மாவட்ட எஸ்.பி. செந்தில்குமாரை தொடர்பு கொண்டு, சம்பவம் குறித்து கூறியுள்ளனர். எஸ்.பி. அறிவுறுத்தலின் பேரில், கும்பகோணம் போலீசார், கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததோடு, தினேஷ், வசந்த், புருஷோத்தமன் மற்றும் அன்பரசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தினேஷ் மற்றும் வசந்த் ஆகியோர் புதன்கிழமை இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், அவர்கள் இருவரும் காவல்துறையினர் கைது செய்யச் சென்றபோது தப்பியோட முயற்சித்ததாகவும், அப்போது காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்படாமல், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றிரவு புருஷோத்தமன் மற்றும் அன்பரசன் ஆகியோர் கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு, மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வந்தனர். அப்போது, இருவரும் நடக்க முடியாமல், போலீசாரை தாங்கிப் பிடித்தபடி, நடந்து வந்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய இருவரும், கும்பகோணம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக, ராஜஸ்தான் இளம்பெண், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து, இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை கண்டிக்கும் விதமாக, கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே, ராஜஸ்தான் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகப் போவதில்லை என கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதுமுள்ள எந்த ஒரு வழக்கறிஞரும், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நால்வருக்கும் ஆதரவாக ஆஜராக வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.