​​ விஷாலின் கட்டளையை தகர்த்தார் நடிகர் தனுஷ்..! இனி கட்டுப்பாடு இல்லை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஷாலின் கட்டளையை தகர்த்தார் நடிகர் தனுஷ்..! இனி கட்டுப்பாடு இல்லை

Published : Dec 07, 2018 7:01 AM

விஷாலின் கட்டளையை தகர்த்தார் நடிகர் தனுஷ்..! இனி கட்டுப்பாடு இல்லை

Dec 07, 2018 7:01 AM

தயாரிப்பாளர் சங்கத்தை வைத்து படவெளியீட்டில் அரசியல் செய்வதாக விஷாலுக்கு எதிராக புகார் கிளம்பிய நிலையில், நடிகர் தனுஷ் போர்க்கொடி உயர்த்தியதால், பண்டிகை நாட்களில் எந்த கட்டுப்பாடும் இன்றி படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ள விஷால், பட வெளியீட்டில் தனக்கு வேண்டப்பட்ட 4 பட நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக நீண்ட நாட்களாக புகார் இருந்து வந்தது. அதனை விஷால் மறுத்தும் வந்தார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்த காலா படத்தை விடுமுறை தினத்தில் வெளியிட விடாமல் பள்ளி திறந்த பின்னர் வெளியிட்டதற்கு விஷால் அறிவித்த வேலை நிறுத்தம் மற்றும் கெடுபிடியே காரணம் என்று கூறப்பட்டது.

இதற்கு பதில் அடி கொடுக்கும்வகையில் விஷாலின் சண்டகோழி டூ படம் வெளியான அன்று வட சென்னை படத்தை தனுஷ் வெளியிட்டதால், விஷால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கு பழிவாங்க காத்திருந்த விஷால், தனுஷின் மாரி 2 படத்திற்கு சாதாரண வார நாளில் வெளியீட்டு தேதியை ஒதுக்கிவிட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நாளுக்கு முன்னதாக வரும் வார இறுதி விடுமுறை தினமான டிசம்பர் 21 ந்தேதி தனது தயாரிப்பு நிறுவனத்தின் கே.ஜி.எப் என்ற படத்தை வெளியிட திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதனை ஏற்றுக்கொள்ளாத நடிகர் தனுஷ் , 21 ந்தேதி தனது மாரி டூ படத்தை வெளியிடபோவதாக அறிவித்தார். அதே நாளில் தான் விஜய் சேதுபதியின் சீதக்காதியும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் கனா படமும் வெளியிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் 4 படத்திற்கும் அதிக அளவிலான திரை அரங்குகள் கிடைக்க வில்லை..!

ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு சர்கார் படத்துடன் வரப்போவதாக அறிவித்து விட்டு ஒரு வாரம் தாமதமாக படத்தை வெளியிட்ட திமிரு பிடிச்சவன் படத்தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ள நிலையில், நடிகர் தனுஷுக்கும் தடை விதிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சில குறிப்பிட்ட தயாரிப்பாளர்களுக்கு மட்டும் எப்படி பண்டிகை நாட்களான தீபாவளிக்கும், பொங்கலுக்கும் படத்தை வெளியிட அனுமதி வழங்கப்படுகின்றது என்றும், விஷால் அந்த குறிப்பிட்ட கார்பரேட் காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவது ஏன் ? என்றும் கேள்வி எழுப்பிய பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தனுஷ் சார்பில் ஒண்டர்பார் வினோத் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். திட்டமிட்டபடி 21ந்தேதி படம் வெளியாகும் என பிடிவாதமாக இருந்தார், சீதக்காதி தயாரிப்பாளரும் அதே தேதியில் படம் வெளியிட உறுதியாக இருந்தார். இதையடுத்து ஆத்திரமடைந்த விஷால் ஒறுமையில் பேசியதால் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.

இதையடுத்து விஷால் அங்கிருந்து வெளியேற, தயாரிப்பாளர் சங்க செயலாளர் எஸ்.எஸ் துரைராஜ் கூட்டத்தை நடத்தினார் . இறுதியில் கிற்ஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பம் போல படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். நடிகர் தனுஷின் எதிர்ப்பால் இதுவரை தாயரிப்பாளர் சங்கத்தில் கடைபிடிக்கப்பட்ட விஷாலின் கட்டளைகள் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் விஷால், பிரபல கார்பரேட் நிறுவனம் ஒன்றின் படத்தை பொங்கல் பண்டிகைக்கு தடையின்றி வெளியிடுவதற்கு ஏதுவாகவே, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விபரம் அறிந்த தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.