​​ சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பூங்கா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பூங்கா

Published : Dec 06, 2018 9:31 PMசென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பூங்கா

Dec 06, 2018 9:31 PM

தமிழகத்திலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பூங்கா சென்னையில் திறக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் பெருநகரங்கள் துவங்கி கிராமங்கள் வரை பூங்காக்கள் என்பது சாதாரண ஒன்று தான் ஆனால் மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை அவர்களுக்கான சிறப்பு பூங்கா என்பது நிறைவேறாத கனவுகளில் ஒன்று. சென்னை மாநகராட்சியின் முயற்சியால் அவர்களது நீண்ட நாள் கனவான சிறப்பு பூங்கா விரைவில் நினைவாகவுள்ளது.

சாந்தோம் நெடுஞ்சாலையின் வாகன இரைச்சல்களுக்கு சற்றுத்தள்ளி சிறு தெருவுக்குள் 15000 சதுர அடி பரப்பளவில் 1.36 கோடி மதிப்பில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்காவின் உள்ளே நுழையும் போதே நம்மை வரவேற்கிறது மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கைவண்ணத்திலான சுவர் ஓவியங்கள் . குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், ஊஞ்சல் , சறுக்குமரம், ராட்டினம், சீசா, ஹெர்பல் பூங்கா, நடைபாதை , ஜிம் , ஓய்வறை போன்ற சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த சிறப்பு பூங்கா .

image

மாநகராட்சி அதிகாரிகளுடைய சிறப்பு அனுமதியுடன் பூங்காவை சுற்றிப்பார்க்க வந்த சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் நேர்த்தை கழித்ததும், சிறுகுழந்தையாக மாறி விளையாடியதும் காண்போரை நெகிழச்செய்தது .

பூங்காவில் உள்ள சிறப்பு ஊஞ்சலில் முதன்முறையாக விளையாடியதால் தன்னுடைய சிறு வயது கனவு நிறைவேறியதாக கூறும் விஜயலட்சுமி தனக்கு இந்த அனுபவம் எல்லையற்ற மகிழ்ச்சியை தருவதாகவும் கூறுகிறார். 

பூங்காக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் அத்தியாவசியமானது என அவர்களது உணர்வுகளை சென்னை மாநகராட்சி புரிந்துகொண்டுள்ளதை போன்று மற்ற மாவட்டங்களிலும் சிறப்பு பூங்காக்கள் உருவாக்கப்படும் என எப்போதும் போல நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.