​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்லை தாக்குதல்களை விட குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் : உச்சநீதிமன்றம்

Published : Dec 06, 2018 7:04 PM

எல்லை தாக்குதல்களை விட குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் : உச்சநீதிமன்றம்

Dec 06, 2018 7:04 PM

எல்லை தாக்குதல்களை விட குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சாலை பராமரிப்பில் மத்திய, மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் குண்டும், குழியுமான சாலைகளில் நேரிடும் விபத்து தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான சாலை பாதுகாப்பு குழுவை அமைத்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அந்த குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், குண்டும், குழியுமான சாலைகளால் நேரிட்ட விபத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 14,926 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

சாலை பராமரிப்புகளில் மத்திய, மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா அடங்கிய அமர்வு , 2013 முதல் 2017 வரையில் மோசமான சாலைகள் காரணமாக நேரிட்ட விபத்துக்கள், சாலைகளை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதை காட்டுவதாக குறிப்பிட்டது.

எல்லையில் பயங்கரவாத தாக்குதலில் ஏற்படும் உயிரிழப்பை விடவும் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு அதிகம் என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். சாலைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அரசுகள், பணிகளை செய்யாத காரணத்தினால் இதுபோன்ற உயிரிழப்புக்கள் நேரிடுவதாக கூறிய நீதிபதிகள், இது போன்ற அலட்சிய போக்குகளை ஏற்க முடியாது என்றனர்.

இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், மோசமான சாலையினால் உயிரை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.