​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் தனியார் மருத்துவமனை ஆக்கிரமிப்பு வரும் 10 ஆம் தேதி அகற்றப்படும்- வருவாய் கோட்டாட்சியர்

Published : Dec 06, 2018 4:37 PM

சேலம் தனியார் மருத்துவமனை ஆக்கிரமிப்பு வரும் 10 ஆம் தேதி அகற்றப்படும்- வருவாய் கோட்டாட்சியர்

Dec 06, 2018 4:37 PM

சேலம் குறிஞ்சி மருத்துவமனையின் நீர் நிலை ஆக்கிரமிப்பு வரும் 10 ஆம் தேதி அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7-ஆம் தேதிக்குள் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையான குறிஞ்சி மருத்துவமனை, இஸ்மாயில் கான் ஏரியில் இருந்து வரும் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டியுள்ளதாக பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பல்வேறு வழக்குகளை தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டிருந்தது.

இதுவரை ஆக்கிரமிப்புக் கட்டிடம் இடிக்கப்படாமல் இருந்த நிலையில் அண்மையில் பெய்த மழையில் இந்த மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது.

இந்நிலையில் குறிஞ்சி மருத்துவமனையின் ஆக்கிரமிப்புக் கட்டிடப் பகுதியை இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 100 அடி நீளம் 20 அடி அகலம் 50 அடி உயரம் உள்ள கட்டிடம் வரும் 10-ஆம் தேதி இடித்து அகற்றப்படும் என மருத்துவமனையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளை வரும் 7-ஆம் தேதிக்குள் வேறு மருத்துவமனைக்கு மாற்ற வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, உள் நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அரசுத் தரப்பில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் மீது வெள்ளைத் தாளை ஒட்டி மறைத்துவிட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பணிகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

 

இதனிடையே அதே தினத்தன்று இஸ்மாயில்கான் ஏரியின் கோடிவாய்க்கால் நீர் வழிப் புறம்போக்கில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் அகற்றப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் ஆக்கிரமிப்பாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் மாவட்ட வருவாய்த்துறையும் சேலம் மாநகராட்சியும் அறிவித்துள்ளன.