​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அர்ஜெண்டினா பயணம்

Published : Nov 28, 2018 6:29 AM



ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அர்ஜெண்டினா பயணம்

Nov 28, 2018 6:29 AM

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அர்ஜண்டினாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். மாநாட்டின்போது சீன அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஜி 20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. வேளாண்துறை சீர்திருத்தம். வர்த்தகம், சூழலியல் மாற்றம், சுகாதாரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் அமைப்பு தலைவர்களின் மாநாடும் நடைபெற உள்ளது.

ஜி20 மாநாட்டின்போது, சீன அதிபர் சீ ஜின்பிங்கை சந்திக்க உள்ள பிரதமர் மோடி அவருடன் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், தொழில்நுட்ப பரிவர்த்தனை, பாதுகாப்பு உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.சீ ஜின்பிங்கை அவர் தொடர்ந்து நான்காவது முறையாக சந்தித்துப் பேசுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது, அருணாசலப் பிரதேசத்தில் சீனப்படைகளின் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி பிரச்சினை எழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரெஞ்ச் அதிபர் இமானுவல் மேக்ரன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்புள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.