​​ கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணை

Published : Nov 20, 2018 11:31 AMகஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணை

Nov 20, 2018 11:31 AM

கஜா புயல் பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.

கஜா புயலால் தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்துள்ளன. புயல் மழையால் நாற்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.

இந்நிலையில் இராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கஜா புயல் பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவித்து உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25இலட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 10இலட்ச ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். பயிர் சேதமடைந்ததற்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் புயல் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து மின்சாரம் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த மனு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே புயல் பாதித்த மாவட்டங்களைத் தேசிய பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரிய முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்தால் பிற்பகலில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.