“பிசாசை விரட்டுகிறேன்..” பெண்ணிடம் அத்துமீறிய காட்டேரி போதகர் கைது ..! ஆட்டுக்குட்டி சபையில் அட்டகாசம்
Published : Dec 26, 2024 8:51 PM
“பிசாசை விரட்டுகிறேன்..” பெண்ணிடம் அத்துமீறிய காட்டேரி போதகர் கைது ..! ஆட்டுக்குட்டி சபையில் அட்டகாசம்
Dec 26, 2024 8:51 PM
சென்னை தேனாம்பேட்டையில் பிசாசை விரட்டுவதாக கூறி வீட்டுக்கு அழைத்துச்சென்று பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக போதகர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் வி.கே கடல் மீனவன் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருபவர் கெனிட்ராஜ்.
தன்னை கடல் மீனவனாகவும், தேசிய விருது பெற்றவராகவும் யூடியூப்பர்களிடம் அள்ளி விடுவதை வாடிக்கையாக்கிய கெனிட் ராஜ் ,மந்தைவெளி மாதா சர்ச் ரோட்டில் உள்ள ஆட்டுக்குட்டி சபையில் போதகராகவும் உள்ளார்.
இவரது சபைக்கு 26 வயது பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்று ஜெபம் செய்து விட்டு கெனிட் ராஜை சந்தித்து ஆசிப்பெற்று செல்வது வழக்கம் என்று கூறப்படுகின்றது.
இடையில் சில நாட்களாக அந்த பெண் சர்ச்சுக்கு செல்லாத நிலையில், அண்மையில் மீண்டும் சென்றுள்ளார். பாதிரியார் கெனிட்ராஜிடம் , தான் மன உளைச்சலில் இருப்பதாக கூறி அந்த பெண் அழுததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து “உனக்கு உடம்பில் கெட்ட ஆவி, பிசாசு ஏதாவது இருக்கலாம், நீ எனது வீட்டுக்கு வா.. நான் அதனை சரி செய்கிறேன் ”என கூறி கெனிட்ராஜ் அழைத்து உள்ளார். ஆனால் அந்தப்பெண் வீட்டிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த கெனிட் ராஜ், தனது வீட்டிற்கு வரவில்லை என்றால் உனது கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அழைத்ததால் பயந்து போய் கடந்த 16 ஆம் தேதி கெனிட் ராஜ் வீட்டிற்கு அந்த பெண் சென்றதாக கூறப்படுகின்றது.
பிசாசை விரட்டுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததால் அதிர்ந்து போன அந்த பெண், போதகரின் கெட்ட எண்ணத்தை புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
போதகர் பிசாசு விரட்டுவதாக கூறி தன்னிடம் காட்டேரி போல கடுமையாக நடந்து கொண்டதாக அந்தப் பெண் தனது கணவரிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து கணவன் மனைவி இருவரும் நடந்த சம்பவத்தை விவரித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கெனிட்ராஜ் மீது புகார் அளித்தனர்.
விசாரணையில் கெனிட் ராஜின் லீலைகள் உறுதியானதால் அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெனிட்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.