ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!
Published : Dec 24, 2024 1:08 PM
ராமேஸ்வரத்தில் குளிக்கிறீங்களா.. உடை மாற்றும் அறையில் உஷார் இருட்டில் சிமிட்டிய 3 கண்கள் ..! ஐ.டி . பெண் பொறியாளர் தரமான சம்பவம்..!
Dec 24, 2024 1:08 PM
ராமேஸ்வரத்தில் 3 இடத்தில் ரகசிய காமிராக்கள் வைத்து பெண்கள் உடைமாற்றுவதை படம் பிடித்த அரசியல் பிரமுகரின் மருமகனை, ஐ.டி பெண் பொறியாளர் சாமர்த்தியமாக போலீசில் சிக்கவைத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
என் மருமகன அடிக்காதீங்க.. அடிக்காதீங்க.. என்று காவல் நிலைய வாசலில் உருளும் இவர் அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன்..! இவரது மருமகனான ராஜேஷ் கண்ணன் என்பவர் தான் பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய காமிரா வைத்து படம் பிடித்த சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்..!
புதுக்கோட்டையை சேர்ந்த ஐ.டி. பெண் பொறியாளர் ஒருவர் அக்னிதீர்த்த கடலில் குளித்துவிட்டு கடலுக்கு அருகில் உடைமாற்றுவதற்காக நடந்து சென்றுள்ளார். வெளியில் அமர்ந்திருந்த ராஜேஷ் கண்ணன், வாங்கம்மா வாங்க என்று அன்போடு அழைத்துள்ளார், கட்டணம் எவ்வளவு என்று கேட்டதற்கு அதெல்லாம் வேணாம்மா சும்மா மாற்றிக்கோங்க.. என்று பெருந்தன்மையாக கூறி இருக்கிறார்.
இது அந்த பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடைமாற்றும் அறைக்குள் சென்றதும் ஒருவேளை ரகசிய கேமரா ஏதும் வைக்கப்பட்டிருக்குமோ என்று தனது செல்போன் கேமிராவை ஆன் செய்து அறை முழுவதும் படம் பிடித்துள்ளார். அப்போது சிவப்பு வர்ணத்தில் காமிரா இருக்கும் பகுதி கண்சிமிட்டி இருக்கின்றது.
மெமரி கார்டுடன் கூடிய ரகசிய காமிராவை கண்டுபிடித்த அந்த பெண், அடுத்தடுத்த அறைகளிலும் சோதனை செய்து மொத்தம் 3 காமிராக்களை கைப்பற்றி உள்ளார். பின்னர் உடையை மாற்றிவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து நேராக காவல் நிலையம் சென்று வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். காமிராவில் பொருத்தப்பட்ட மெமரிகார்டுகளை ஆய்வு செய்தபோது ஏராளமான ஆண்களும் பெண்களும் உடைமாற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதையடுத்து போலீசார் ராஜேஷ்கண்ணனை கொத்தாக தூக்கி காவல் நிலையம் கொண்டு வந்தனர். காமிராவை தான் வைக்கவில்லை என்று மறுத்த நிலையில் சிறப்பான கவனிப்பால், தான் கடந்த நவம்பர் மாதம் அமேசானில் ஆர்டர் செய்து 3 காமிராக்களை வாங்கியதாகவும், அழகான பெண்கள் கடலில் குளித்து விட்டு ஈரத்துணியோடு வரும்போது அவர்களை இலவசமாக உடைமாற்ற அனுமதித்து , வீடியோ எடுத்ததை ராஜேஷ்கண்ணன் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவனது மாமனார், மனைவி மற்றும் உறவினர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்த நிலையில், ராஜேஷ்கண்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுற்றுலா செல்லும்போது வெளியிடங்களில் உடைமாற்றும் பெண்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்தனர். அதே நேரத்தில் ராமேஸ்வரத்தில் செயல்படுகின்ற பெண்கள் உடைமாற்றும் அறைகளை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.