​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூப்பர் மார்க்கெட்டில் குட் நைட், ஆல் அவுட் விற்பதா ?.. பெண் அதிகாரி திடீர் ரெய்டு..! கேள்விகளால் மடக்கிய வியாபாரிகள்

Published : Dec 16, 2024 1:47 PM



சூப்பர் மார்க்கெட்டில் குட் நைட், ஆல் அவுட் விற்பதா ?.. பெண் அதிகாரி திடீர் ரெய்டு..! கேள்விகளால் மடக்கிய வியாபாரிகள்

Dec 16, 2024 1:47 PM

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் குட் நைட், ஆல் அவுட் போன்ற கொசு விரட்டிகள் விற்கக் கூடாது என கூறி வேளாண் அதிகாரி ஒருவர் பறிமுதல் செய்ய முயன்ற நிலையில், அவரை வியாபாரிகள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டிற்கு தமிழ்நாடு அரசு என்று பெயரிட்ட வாகனத்தில் வந்திறங்கிய பெண் ஒருவர் தன்னை வேளாண் உதவி இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தான் சூப்பர் மார்க்கெட்டில் ஆய்வுக்கு வந்திருப்பதாக கூறினார். 

சூப்பர் மார்க்கெட்டில் வேளாண் அதிகாரிக்கு என்ன வேலை என்று கடைக்காரர் கேட்டபோது, குட் நைட் , ஆல் அவுட் உள்ளிட்ட கொசு விரட்டிகளையும், கொசுவர்த்தி சுருள், எலி பேஸ்ட் , எலி மருந்து, விற்பதற்கு வேளாண் துறையிடம் இருந்து பெற்ற பூச்சிக்கொல்லி விற்பதற்கான அனுமதி கடிதம் இருக்கிறதா ? என்று கடைக்காரரிடம் கேள்வி எழுப்பினார்.

இதனை கேட்டு குழம்பிப்போன கடைக்காரர், கொசு விரட்டிகள் வீட்டு தேவை பொருட்கள் என்று குட் நைட், மற்றும் ஆல் அவுட் அட்டையில் குறிப்பிட்டு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

அதனை கேட்காமல், அங்கிருந்த அனைத்து கொசு விரட்டி லிக்விட் களையும் காயில்களையும் அந்த அதிகாரி அட்டை பெட்டியில் எடுத்துப்போட்டு பறிமுதல் செய்ய தொடங்கினார்.

உடனடியாக இது குறித்து பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை வணிகர் சங்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த வணிகர் சங்கத்தினர் அந்தப் பெண் அதிகாரியை முற்றுகையிட்டு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினர் அவரிடம் எந்த கேள்விக்கும் முறையான பதில் இல்லை.

தாங்கள் இந்த பொருட்களை பறிமுதல் செய்ய விடமாட்டோம் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை அடுத்து அவர் தங்களிடம் 7500 ரூபாய் செலுத்தி முறையாக அனுமதி பெறும் வரை இந்த பொருட்களை விற்கக் கூடாது என்பதற்காகவும், அவற்றையெல்லாம் எடுத்து தனியாக வைப்பதாகவும் கூறி சமாளித்தார்.

வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் கடையை விட்டு வெளியே சென்றார். அவருடன் வந்திருந்த நபர் எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லாமல் இருந்த நிலையில் வியாபாரிகள் அவரை கடுமையாக எச்சரித்தனர்.

பணம் பறிக்கும் நோக்கிலும், கொசு விரட்டிகளை பறிமுதல் செய்யும் எண்ணத்திலும் வந்திருப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவித்த நிலையில் அந்த பெண் அதிகாரி கடைசி வரை தனது பெயரை சொல்லாமலேயே அங்கிருந்து சென்று விட்டார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியிடம் தொலைபேசி வாயிலாக விசாரித்த போது , தனக்கு வந்த புகாரின் பேரில் தான் ஆய்வுக்காக சென்றதாகவும், அங்கிருந்த பொருட்கள் எதையும் எடுத்து வரவில்லை என்றும் அங்கேயே வைத்து விட்டு வந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பூச்சிக்கொல்லி விற்பனைக்கான முறையான அனுமதி பெற்று கொசு விரட்டிகளை விற்க வேண்டும் என்று அறிவுறுத்தவே சென்றதாகவும் விளக்கம் அளித்தார்