​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயிர் பயத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே? அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு கள ஆய்வுக்கு அதிகாரிகள் ஏன் போகலை?

Published : Nov 16, 2024 8:06 AM



உயிர் பயத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே? அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு கள ஆய்வுக்கு அதிகாரிகள் ஏன் போகலை?

Nov 16, 2024 8:06 AM

டிஜிட்டல் பயிர் சர்வே எடுக்க வேளாண் கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்துவது மிகவும் தவறான முடிவு என எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், பூச்சிக்கடி, கல்குவாரியினர் தாக்குதல் என கடும் சிரமத்தை சந்திப்பதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், டிஜிட்டல் வேளாண் சர்வே பணிக்கு சென்ற மாணவிகள், பாம்புக்கடி, பூச்சிக்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சிகள்தான் இவை..

திருவள்ளுரில், டிஜிட்டல் வேளாண் சர்வே பணிக்கு வேளாண் துறை அதிகாரிகளுடன் சென்ற மாணவர்களை சட்டவிரோத கல்குவாரி கும்பல் தாக்கிய காட்சிகள் தான் இவை..

 வேளாண் நிலங்களின் தரவுகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் வேளாண் கல்லூரி மாணவர்களைக் கொண்டு இப்பணியை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜியோ டேக் செய்ய வேண்டும் என்பதால் களத்திற்கு செல்வது கட்டாயம் என்பதாலும், தங்களது ஊழியர் சங்கம் வலுவாக உள்ளதாலும் வழக்கத்துக்கு மாறாக இப்பணிகளை செய்ய வருவாய்த்துறையினர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 54 கோடி ரூபாய் செலவு செய்யவேண்டிய நிலையில், நிதி உதவி அளிக்காமல், உரிய கருவிகளைக்கூட வழங்காமல், சொந்த செல்போனையே கள ஆய்வு அரசு பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

களத்தில் கடும் சவால்களை சந்திப்பதால் 10 நாட்கள் தொடர்ந்து ஆய்வுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் விடுப்பு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயப்படுத்தி களப்பணிக்கு வேளாண் மாணவர்கள் அனுப்பப்படுவதற்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதிருப்தியில் உள்ள வேளாண் கல்லூரி மாணாக்கர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு..