வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்
Published : Nov 02, 2024 8:09 AM
வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்
Nov 02, 2024 8:09 AM
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கலாய்ப்பது போல பேசினார். தான் அரசியலுக்கு வந்த பின்னர் தான், சேர,சோழ,பாண்டியர், வேலு நாச்சியார், அழகு முத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம் எல்லாம் மக்களுக்கு தெரியும் என்றும் த.வெ.க மாநாட்டில் வைக்கப்பட்ட வேலு நாச்சியார் படமே தான் வரைந்த படம் என்றும் குறிப்பிட்டார்.
உண்மையில் விஜய் கட்சியின் மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் கட் அவுட், 2008-ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட 5 ரூபாய் அஞ்சல் தலையில் இடம்பெற்ற உருவப்படம், வேலு நாச்சியாரின் அஞ்சல்தலை வெளியிடப்பட்ட போது, சீமான் கட்சி ஏதும் தொடங்க வில்லை... ஏன் அரசியலுக்கே வரவில்லை என்றும், வாழ்த்துகள் என்ற பெயரில் படம் இயக்கி வெளியிட்டிருந்தார் என்றும் விமர்சிக்கின்றனர்.
அதேபோல கட் அவுட் வைத்தாயே தம்பி... உனக்கு வேலு நாச்சியார் வரலாறு தெரியுமா என்று விஜய்யை நோக்கி கேள்வி எழுப்பியதோடு, தனது குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டு வெள்ளையனை எதிர்த்து போரிட்டதாக ஆவேசமாக பேசினார் சீமான்.
இதுவும் தவறு என்று சுட்டிக்காட்டி உள்ள சிலர், வேலு நாச்சியாரின் வரலாறு என்று ஜான்சி ராணி லட்சுமி பாயின் வரலாற்றை சீமான் தவறாக கூறி விட்டதாகவும், வேலு நாச்சியார் தனது கணவர் இறந்து 8 ஆண்டுகள் கழித்துதான் வெள்ளையர்களுடன் போர்புரிந்தார் என்றும் கூறுகின்றனர்.
தமிழ், உருது, ஆங்கிலம், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் திறமைவாய்ந்த வேலு நாச்சியார், ஹைதர் அலியின் படைகளை துணைக்கு வைத்துக் கொண்டு, வெள்ளையர்களுக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு, வீரத்தாய் குயிலியின் உயிர்தியாகத்தால் தனது சமஸ்தானத்தை வென்றார் என்பதே வரலாறு என்கின்றனர்.
அதே போல 1996-ஆம் ஆண்டிலேயே வீரன் அழகு முத்துக்கோனுக்கு சென்னை எழும்பூரில் சிலை அமைத்தவர் ஜெயலலிதா என்றும், 1997 ஆம் ஆண்டு வீரன் சுந்தரலிங்கம் பெயரை போக்குவரத்து கழகத்துக்கு சூட்டியவர் கருணாநிதி என்றும் சுட்டிக் காட்டுகின்றனர்.