காதலனை கரம் பிடிக்க போலீஸ் வேடமிட்ட பெண்.. 'ஓசி'யில் மேக்கப் போட முயன்று சிக்கினார்..ராஜதந்திரம் அனைத்தும் வீணானது!
Published : Nov 02, 2024 6:52 AM
காதலனை கரம் பிடிக்க போலீஸ் வேடமிட்ட பெண்.. 'ஓசி'யில் மேக்கப் போட முயன்று சிக்கினார்..ராஜதந்திரம் அனைத்தும் வீணானது!
Nov 02, 2024 6:52 AM
'ரேகிங் செய்யக்கூடாது, ஈவ் டீசிங் செய்யக்கூடாது' என கல்லூரி மாணவர்களுக்கு பெண் உதவி ஆய்வாளர் சீரியசாக அட்வைஸ் செய்யும் இந்தக் காட்சி நிஜத்தில் எடுக்கப்பட்டதும் அல்ல, குறும்பட ஷூட்டிங்கும் அல்ல. ‘பெண் போலீசைத்தான் திருமணம் செய்துகொள்வேன்’ என அடம் பிடித்த காதலனையும் அவரது குடும்பத்தையும் சமாளிப்பதற்காக அபி பிரபா என்ற பெண் செய்த.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் அழகு நிலையம் வைத்திருக்கும் பெண் ஒருவர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். உதவி ஆய்வாளர் சீருடையுடன் தனது அழகு நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர், இதே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுவதாகக் கூறி, 2 முறை பணம் கொடுக்காமல் பேசியல் செய்துவிட்டுச் சென்றதாக அதில் தெரிவித்திருந்தார்.
உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், அபி பிரபா என்ற அப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். காவல் சீருடையில் மகனுடன் நிற்கும் புகைப்படம், காவல் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய ஜீப் முன்பு நின்றிருக்கும் புகைப்படம், காவல் நிலைய அலுவலகம் போன்ற அறையில் உதவி ஆய்வாளர் சீருடையில் லேப்டாப் சகிதம் கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அட்வைஸ் செய்யும் வீடியோ என அபி பிரபாவிடம் இருந்த போட்டோக்களையும் புகைப்படங்களையும் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விழுப்புரம் எஸ்.பி கையெழுத்திட்டது போன்ற அடையாள அட்டையும் அவரிடம் இருந்துள்ளது.
விசாரணையில் ஏற்கனவே திருமணமாகி, கணவரைப் பிரிந்த அபி பிரபா, ரயில் பயணத்தில் சந்தித்த பள்ளிவிளையை சேர்ந்த சிவா என்பவரைத் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். காவல்துறையில் பணியாற்றும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பெற்றோர் நிபந்தனை விதித்திருப்பதாக சிவா கூறவே, போலீஸ் அவதாரம் எடுத்துள்ளார் அபி பிரபா.
சிவாவையும் அவரது குடும்பத்தினரையும் நம்ப வைப்பதற்காக போலீஸ் சீருடையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து வைத்ததும் தெரியவந்துள்ளது. அபிபிரபாவின் இந்த மோசடிக்கு உதவி செய்ததாக அவரது நண்பர் பிருத்விராஜ் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.