வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு -வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால் கர்நாடகா, ஆந்திராவிலும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக பல இடங்களில் சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. முழங்கால் அளவுக்கு தேங்கிய தண்ணீரில் பொதுமக்கள் வாகனங்களை சிரமத்துடன் இயக்கிச் சென்றனர்.
இதேபோன்று ஆந்திராவில் விஜயவாடா, திருப்பதி, நெல்லூர், கடப்பா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. மேற்கு கோதாவரி, எலுரு, கிருஷ்ணா மற்றும் என்டிஆர் மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என ஆந்திரப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தெற்கு ஆந்திர கடற்பகுதியில் புதுச்சேரி - நெல்லூர் இடையே கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சி, காவல், நீர்ப்பாசனம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் உஷாராக இருக்கும்படி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்.