​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Published : Oct 07, 2024 10:10 PM



பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Oct 07, 2024 10:10 PM

வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியான சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து உளவுத்துறையினர் விரிவான அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

காணும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரை பொதுமக்கள் மெரினாவில் கூடுவது வழக்கம். இதற்கு 16 ஆயிரத்து 500 காவல்துறையினரும் 1,500 ஊர்க்காவல் படையினரும் என 18,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம் என்று கூறப்படுகின்றது.

15 லட்சம் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட இந்த வான் சாகச நிகழ்ச்சிக்கு 6,500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் என எட்டாயிரம் பேர் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்த நிலையில் , இதனி சுட்டிக்காட்டி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று உளவு பிரிவு அறிக்கை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் போது அதற்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மருத்துவ தேவைகளையும் செய்ய வேண்டும் என எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது
ஐந்து பேர் உயிரிழந்த அசம்பாவிதத்திற்கு பிறகு உளவுத்துறை சார்பில் சில முக்கிய குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது

குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும், அது லட்சக்கணக்கான மக்களுக்கு போதுமானவையாக இல்லை

பாதுகாப்பு காரணங்களை காண்பித்து மெரினா உட்புறச் சாலையில் வழக்கமாக இயங்கி வந்த குடிநீர், கூல்ட்ரிங்க்ஸ் கடைகள் அகற்றப்பட்டது

கையில் கொண்டு வந்த குடிநீர் தீர்ந்த பிறகு, காசு கொடுத்து வாங்குவதற்கு கூட மெரினா உட்புறச் சாலையில் கடைகள் இல்லை என தெரிய வருகிறது

வான சாகச நிகழ்ச்சி. ஒரே இடத்தில் ஒன்றுகூடி தரையில் பார்க்கும் வகையிலான நிகழ்ச்சி அல்ல. மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் பொதுமக்களை பல்வேறு இடங்களில் தனித்தனியாக பிரித்து நிறுத்தி இருந்தால் ஒரே இடத்தில் கூட்டம் முண்டியடிக்காமல் இருந்திருக்கும்.

காலை 7 மணி தொடங்கி 11 மணி வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்த மக்கள் ஒன்று கூடி நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, ஒரு மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்ததும் ஒரே நேரத்தில் அத்தனை கூட்டமும் ஒரே வழியாக சாலைக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட காரணம்

17 இடங்களில் சென்னை போக்குவரத்து காவல்துறையால் வாகன நிறுத்தம் இடம் ஏற்பாடு செய்யப்பட்டும் போதுமானதாக இல்லை என்றும் பலர் வாகனங்களை ஆங்காங்கே சாலையில் நிறுத்திவிட்டு நிகழ்ச்சிக்கு வந்ததும் கடும் நெரிசலுக்கு காரணம்

குறிப்பாக விவேகானந்தர் இல்லம் முன்பு விமானப் படையின் அதிகாரிகள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அமர்ந்திருந்த பகுதியை சுற்றி மட்டுமே பெரும் கூட்டம் ஒரே இடத்தில் ஒன்று கூடியது.

நேப்பியர் பாலம் முதல் பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் பகுதி வரை பரந்து விரிந்துள்ள கடற்கரையில் அந்தந்த திசையில் இருந்து வருவோரை ஆங்காங்கே பிரித்து நிறுத்தி இருந்தால் சுலபமாக ஆங்காங்கே குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம் என்று உளவுத்துறையினர் சுட்டிக்காட்டி அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.