5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?
Published : Oct 07, 2024 6:14 PM
5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?
Oct 07, 2024 6:14 PM
சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை காணும் ஆவலில் வந்து , கொளுத்தும் வெயிலில் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்து பலியான 5 பேரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயை நிவாரண உதவியாக முதல் அமைச்சர்அறிவித்துள்ள நிலையில் , உயிரிழப்புக்காண காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உள்த்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்
விண்ணை பிளந்து விமானங்கள் செய்த சாகசத்தை காணும் ஆவலில் கடற்கரையில் திரண்ட லட்சக்காணக்கானோர் கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் நின்று வான் சாகசத்தை ரசித்தாலும், குடிநீர் இன்றியும், முறையான போக்குவரத்து வசதி கிடைக்க பெறாமலும், கூட்ட நெரிசலிலும் கடும் அவதியடைந்தனர். 250 பேர் வரை மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கார்த்திகேயன், ஜான், உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்
இந்த நிகழ்ச்சிக்காண முன்னேற்பாடுகள் குறித்து கடந்த வாரம் நடந்த அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்படுகின்றது. மெரீனா கடற்கரை முழுவதும் 150 சிண்டெக்ஸ் டேங்குகளில் குடிதண்ணீர் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு பெருநகர சென்னை மாநகராட்சி உடையது என்று சுட்டிக்காட்டியுள்ளார். நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்குவது மாநகர போக்குவரத்து கழகம் செய்ய வேண்டியது என்றும் மயங்கி விழுந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி முதல் உதவி சிகிச்சை அளித்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது சுகாதாரத்துறையின் பொறுப்பு என்றும் அறிவுறுத்தி உள்ளார். மக்களின் கூட்டம் குறையும் வரை கூடுதல் மின்சார ரெயில் இயக்க தென்னக ரெயில்வேயை கேட்டுக் கொண்டுள்ளார். இதில் எங்கே தவறு நடந்தது ? மக்கள் பாதிப்புக்கு என்னகாரணம் ?என்பதை கண்டறிந்து விரிவான அறிக்கை அளிக்கும்படி காவல்துறைக்கு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்
இதற்கிடையே வான் சாகச நிகழ்ச்சிக்கு வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கும் தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.