வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்
Published : Oct 06, 2024 6:53 AM
வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்
Oct 06, 2024 6:53 AM
மகாபலிபுரத்துக்கு இரு சக்கரவாகனத்தில் லாங் டிரைவ் சென்ற காதல் ஜோடி மீது அரசு பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி தூக்கி வீசப்பட்டு பலியானார். காதலி உயிரிழப்பை தாங்கிக்கொள்ள இயலாமல் இளைஞர் மற்றொரு பேருந்துக்குள் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான கல்லூரி மாணவி சபரீனா. தனியார் கல்லூரியில் , மூன்றாம் ஆண்டு பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்த சபரீனாவும், உத்திரமேரூர் கமலம்பூண்டி பகுதியை யோகேஸ்வரன் என்ற 20 வயது இளைஞரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் காதல் ஜோடி சனிக்கிழமை டியோ ஸ்கூட்டரில் மகாபலிபுரம் சென்று விட்டு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருக்கழுக்குன்றம் திரும்பியுள்ளனர். மதியம் 12.30 மணி அளவில் பூஞ்சேரி சந்திப்பை அவசரமாக கடக்க முயன்ற போது , சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச்சென்ற புதுச்சேரி அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்பக்கம் மோதியது. இதில் ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த சபரீனா சாலையில் தூக்கி வீசப்பட்டார். ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் அடைந்த சபரீனா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அவரை மீட்டு பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சபரீனாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் . இத்தகவலை கேட்டு யோகேஸ்வரன் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதார். உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அழுது கொண்டே இருந்த யோகேஸ்வரன், பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே சென்று, கிழக்கு கடற்கரை சாலையில், பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற மற்றொரு அரசு பேருந்தின் முன்பாக பாய்ந்தார். பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கியதில் யோகேஸ்வரனின் உடல் நசுங்கி துண்டானது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார்.
விபத்தில் உயிரிழந்த சபரீனா , தற்கொலை செய்து கொண்ட யோகேஸ்வரன் ஆகிய இருவரின் உடலை மீட்ட மாமல்லபுரம் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து மற்றும் தற்கொலை தொடர்பாக தனித்தனி வழக்குகள் பதிவு செய்து , இரு பேருந்துகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னை நம்பி வந்த சபரீனா உயிரிழந்தால் அவரது பிரிவை தாங்கிக்கொள்ள இயலாமலும், இந்த சம்பவம் குறித்து இருவரது பெற்றோர்களுக்கும் தெரிந்தால் என்ன ஆகுமோ ? என்ற பயத்திலும் யோகேஸ்வரன் இந்த சோக முடிவை தேடி கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.