​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Published : Oct 01, 2024 7:39 AM

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Oct 01, 2024 7:39 AM

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்தநாள்... வசன உச்சரிப்பாலும், முகபாவனையாலும் ஈடுஇணையற்ற நடிகராகத் திகழ்ந்து, உணர்வுப்பூர்வமான நடிப்பால் சிகரம் தொட்டவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு....

1952-ல் அறிமுகமான முதல் திரைப்படமான பராசக்தியில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான வசனங்களுக்கு தன்னுடைய சிறப்பான வசன உச்சரிப்பால் உயிர்கொடுத்தவர் சிம்மக் குரலோன் சிவாஜிகணேசன்.

பீம்சிங், பிஆர் பந்துலு, ஏபி நாகராஜன் என்ற மும்மூர்த்திகளின் இயக்கத்தில் வெளியான படங்களால் சிவாஜியின் திரைப்பயணம் மெருகேறியது.

அபார ஞாபகசக்தியால் மிக நீண்ட வசனங்களையும் ஒரே மூச்சில் பேசும் வல்லமை படைத்தவராகத் திகழ்ந்தார் சிவாஜி. திருவிளையாடல், கந்தன்கருணை போன்ற புராணப் படங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பை இன்றளவும் எவரும் மிஞ்சிவிடவில்லை.

சம்பூர்ண ராமாயணம், கர்ணன் போன்ற இதிகாசப் படங்களில் நடித்து அந்த கதாபாத்திரமாகவே நிலைநிறுத்திக் கொண்டவர் சிவாஜி

கட்டபொம்மன், வ.உ.சி, பகத்சிங்,கொடிகாத்த குமரன், பாரதியார் என விடுதலைப் போராட்ட தியாகிகளை தன்னுடைய நடிப்பால் மக்கள் மனதில் விதைத்தவர்..

ஏழை, பணக்காரன், பக்தன், குடிகாரன், பித்தன், மன்னன், விடுதலை வீரன் என தமதுபடங்களில் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

கமல், ரஜினி, சத்யராஜ், விஜய் போன்ற மற்ற நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்த போதிலும் தமது நடிப்பால் முத்திரை பதித்தார்.

ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டுஅமர்ந்துள்ள சிவாஜியின் திரைப்படங்கள் பாடங்களாகவும் திகழ்கின்றன. பாமரன் முதல் படைப்பாளிகள் வரை அனைவரையும் நடிப்பாற்றலால் கட்டிப்போட்டதால் தான் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சிவாஜியின் நடிப்பு இன்றும் பேசப்படுகிறது என்றால் அது மிகையல்ல..