நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை
Published : Sep 27, 2024 7:46 AM
நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை
Sep 27, 2024 7:46 AM
சாலையை மறித்து ஆட்டோவை நிறுத்தியதை தட்டிக்கேட்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை விரட்டி விரட்டி தாக்கிய ஆட்டோ ஓட்டுனரை , இரு பெண்கள் மடக்கிப்பிடித்து சமாதானப்படுத்திய சம்பவம் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நிகழ்ந்துள்ளது.
சாலையில் நிறுத்தப்பட்ட ஆட்டோவை நகர்த்த சொன்னதால் அரசு போக்குவரத்து கழக ஊழியரை ஆட்டோ ஓட்டுனர் விரட்டி விரட்டி தாக்கிய காட்சிகள் தான் இவை..!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை மாநகரப் பேருந்து பணிமனையில் பணிபுரிந்து வரும் 5 போக்குவரத்து தொழிலாளர்கள், குரோம்பேட்டையில் இருந்து புதிய பேருந்துகளை தங்களது பணிமனைக்கு எடுத்து வந்துள்ளனர். வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்த போது ஆட்டோ ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனை நகர்த்தச்சொன்னதால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆட்டோ ஓட்டுனர், போக்குவரத்து ஊழியரை தாக்கத் தொடங்கினார்
போக்குவரத்து காவலர் முன்னிலையில் விரட்டி விரட்டி முரட்டுத்தனமாக தாக்கினார்
இந்த சம்பவத்தை இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததால் அடிப்பதை நிறுத்தி தனது பக்க நியாயத்தை அவரிடம் தெரிவித்தார் ஆட்டோ ஓட்டுனர்.
அதற்குள்ளாக மேலும் சிலர், அவரை சுற்றுப்போட தொடங்கியதால் மீண்டும் போக்குவரத்து ஊழியரை தாக்க தொடங்கிய அந்த ஆட்டோ ஓட்டுனர், தடுக்க வந்தவரை கீழே தள்ளி மிதித்தார்
இதனால் அவரை தடுக்க பயந்து அனைவரும் விலகி நின்ற நிலையில், வீடியோ எடுத்த பெண் அவரை மடக்கிப்பிடித்தார். உடன் மற்றொரு பெண்ணும் அவரை பிடித்து கன்னத்தில் அடித்து அடக்கினார். அந்த பெண், அவரது உறவினராக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
இரு பெண்களும் மடக்கிய நிலையில் பேருந்துக்குள் இருந்து தன்னுடைய அடாவடியை வீடியோ எடுப்பதை பார்த்ததும், ஆம்பளடா... என்று கூச்சலிட்டவாறே அங்கிருந்து சென்றார் அந்த ஆட்டோ ஓட்டுனர்
இந்த சம்பவம் தொடர்பாக புகார் ஏதும் கொடுக்கப்படாத நிலையில், தாக்குதல் காட்சிகள் வெளியானதால் விசாரணையை தொடங்கி உள்ள போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுனரை தேடி வருகின்றனர்.