ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு
Published : Sep 23, 2024 9:51 PM
ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு
Sep 23, 2024 9:51 PM
சென்னை நீலாங்கரை அருகே பங்கிங்கம் கால்வாயில் பதுக்கி வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை கைப்பற்றுவதற்காக அழைத்துச்சென்ற போது போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ரவுடி சீசிங் ராஜா, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சீசிங் ராஜா, 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகளில் தொடர்புடைய ஏ - பிளஸ் கேட்டகிரி ரவுடி. 7 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சீசிங்ராஜா 10 நிலுவை வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை இருந்ததால் நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
ரவுடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜாவின் கை ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கிலும் நீண்டிருக்குமா என்ற சந்தேகம் இருந்ததால், ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் ஆந்திர வனபகுதியில் தீவிரமாக தேடி வந்தனர்.
கடந்த இரு மாதங்களாக சீசிங்ராஜாவை தேடி வரும் நிலையில், கடந்த மாதம் வேளச்சேரியில் மதுபான விடுதியில் ஊழியரை துப்பாக்கியை காண்பித்து மிரட்டி பணம் பறித்தார் என சீசிங்ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ராஜம்பேட் எனும் இடத்தில் வைத்து சீசிங்ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றி சென்னை கொண்டுவந்தனர்.
சென்னை கொண்டு வரப்பட்டு, சீசிங்ராஜாவை வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை பறிமுதல் செய்ய, சீசிங் ராஜா கொடுத்த தகவலின் படி, நீலாங்கரை அருகே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் ஆய்வாளர் இளங்கனி மற்றும் விமல் ஆகியோர் தலைமையில் போலீசார் அழைத்துச் சென்றனர். முதலில் இரண்டு இடங்களில் துப்பாக்கியை தேடுவது போல் நடித்ததாகவும், பின்னர் வேறு ஒரு இடத்திலிருந்து துப்பாக்கியை எடுத்து கொடுப்பது போல் பாவனை செய்து திடீரென ஆய்வாளர் இளங்கணியை நோக்கி சீசிங் ராஜா துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதாகவும் ஆனால் இரண்டு குண்டுகளும் ஆய்வாளர் மீது பாயாமல் அவரது வாகனத்தின் கண்ணாடியை துளைத்துச் சென்றதாக இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட வேளச்சேரி ஆய்வாளர் விமல் தற்காப்புக்காக இரண்டு ரவுண்டுகள் சீசிங் ராஜாவை நோக்கி சுட்டதில் அவரது இடது மார்பில் குண்டுகள் பாய்ந்ததில் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சீசிங் ராஜாவிற்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என விளக்கமளித்த இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, என்கவுன்ட்டர் சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதில்லை எனவும், அது அந்தந்த நேரத்து சூழலால் நடக்கிறது என்றார்.
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங்ராஜா ஆந்திராவைப் பூர்வீகமாகக்கொண்டவர். சிறு வயது முதலே கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் வாகனக் கடன் கொடுக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது, கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை அடாவடியாக பறிமுதல் செய்வதுதான் அவரது பணி, அதனால் அடைமொழி பெயராக சீசிங் ராஜா என பெயர் வந்து சேர்ந்தது. அதுவே ரவுடியான போதும் நீடித்தது. தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதியிலும் வழிபறி, கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு பிறகு சென்னையில் அடுத்தடுத்து முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 10 நாட்களுக்குள் பிரபல தாதா காக்கா தோப்பு பாலாஜியும் தற்போது சீசிங்ராஜாவும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.