தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துப்பாக்கி முனையில் காரில் கடத்தப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளரை, துரத்திச் சென்று காவல் உதவி ஆய்வாளர் மீட்டுள்ளார்.
பசுவந்தனை சாலை பகுதியை சேர்ந்த முத்துக்குமார், பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இன்று காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்கு அவர் சென்று கொண்டிருந்த போது, பின்னால் இரு கார்களில் துரத்திய நபர்கள் அவரை வழிமறித்து துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியதாக கூறப்படுகிறது.
இதனை நேரில் கண்ட நாலட்டின் புதூர் காவல் உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் தமது பைக்கில் அவர்களை துரத்திச் சென்றுள்ளார். கோபாலபுரம் விலக்கு அருகே ஒரு காரை உதவி ஆய்வாளர் வழிமறித்தபோது, அதன் ஓட்டுநர் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முத்துக்குமாரை மீட்ட அவர், காரில் இருந்த இருவரை கைது செய்து காரையும், துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். எஞ்சியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தமது பெட்ரோல் பங்க்கை வேறு ஒருவருக்கு விற்பனை செய்த நிலையில், அதற்குரிய பணம் தம்மிடம் இருப்பதை அறிந்து தனது உறவினரான ராமகிருஷ்ணன் என்பவர் தூண்டுதலில் கடத்தல் சம்பவம் நடைபெற்றதாக போலீசாரிடம் முத்துக்குமார் கூறினார்.