போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
Published : Sep 18, 2024 1:34 PM
போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!
Sep 18, 2024 1:34 PM
கஞ்சா விற்பனை, கூலிப்படை சப்ளை என வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப் பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் முல்லை நகர் மேம்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கார் ஒன்றை நிறுத்தி அதில் இருந்த ஒருவரை இறக்கி காரின் டிக்கியை சோதனை செய்ய முயன்ற போது கார் சர்ரென கிளம்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.
காரில் இருந்து இறங்கிய நபரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவரிடம் விசாரித்த போது, பல்வேறு கொலை, கொலைமுயற்சி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி அந்த காரில் தப்பிச்செல்வது தெரியவந்தது.
இதையடுத்து அந்த காரை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் போலீஸ் வாகனத்தில் துரத்திச்சென்றனர்.
காக்கா தோப்பு பாலாஜியின் கார், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
காக்கா தோப்பு பாலாஜி காரை விட்டுவிட்டு இறங்கி புதரை நோக்கி ஓடியதாகவும், போலீஸ் வாகனம் வருவதை கண்டு போலீசாரை நோக்கி தான் வைத்து இருந்த கள்ளத்துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் வாகனத்தின் பேனட் மற்றும் கண்ணாடியில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
பின்னர் தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சரவணன் சுட்டதில் இடது பக்க மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் சாய்ந்து விழுந்த காக்கா தோப்பு பாலாஜியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், வரும் வழியிலேயே அவன் உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து காக்கா தோப்பு பாலாஜியின் உடலானது பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த வியாசர்பாடி குடியிருப்பில் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக மேஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரவுடி காக்கா தோப்பு பாலாஜியிடம் இருந்து கார், கத்தி, கள்ளதுப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
கொல்லப்பட்ட காக்கா தோப்பு பாலாஜிக்கு வயது 45 தான் என்றாலும் அவன் மீது 5 கொலை 15 கொலை முயற்சி, வழிப்பறி கஞ்சா வழக்கு என 55 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பள்ளியில் படிக்கும் போதே கஞ்சா விற்பனை கும்பலோடு ஏற்பட்ட தொடர்பால் படிப்பை கைவிட்டு ரவுடிகளுக்கு கையாலாக வேலை பார்த்து உள்ளான்.
புறா பந்தயம் , சிறுவர்களை வைத்து கஞ்சா விற்பனை என தனது வாலை நீட்டத்தொடங்கிய பாலாஜி, ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை கொலை செய்து தன்னையும் ஒரு ரவுடி என அடையாளப்படுத்திக் கொண்டான் என்கின்றனர் போலீசார்.
வடசென்னையில் ரவுடி வெள்ளை ரவி என்கவுண்டரில் கொல்லப்பட மெல்ல மெல்ல அரசியல் செல்வாக்குடன் தனது கூலிப்படை கும்பலை வளர்க்கதொடங்கிய பாலாஜி, 2009ஆம் ஆண்டு சதீஷ் என்பவர் கொலை வழக்கில் பாலாஜியின் பெயர் சேர்க்கப்பட்டது.
2011-ம் ஆண்டு பில்லா சுரேஷ் என்பவரை வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி காக்கா தோப்பு பாலாஜியின் கூலிப்படை கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்றதாக சுட்டிக் காட்டும் போலீசார், மனைவியின் கண் எதிரே, பில்லா சுரேஷின் தலையை வெட்டிக் கொலை செய்த அடுத்த அரை மணி நேரத்தில் ரவுடி விஜி என்பவரையும் பாலாஜியின் கூலிப்படை வெட்டி சாய்த்தது என்கின்றனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்துக்கு பின்னர் காக்கா தோப்பு பாலாஜி தன்னை வடசென்னையின் தாதாவாக பிரகடனப்படுத்திக் கொண்டு செம்மர கடத்தல் பிசினஸில் தடையின்றி கால் பதித்ததாக கூறப்படுகிறது.
பெரும் வியாபாரிகளிடம் ரவுடி மாமூல் வசூலிப்பது, தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது என கைவரிசை நீண்டதால் யார் பெரியவன் என்று சம்போ செந்திலுக்கும், காக்கா தோப்பு பாலாஜிக்கும் மோதல் முற்றியது.
இந்த தகராறின் எதிரொலியாக காக்கா தோப்பு பாலாஜியை தாட்டித்தூக்க, அவன் சென்ற கார் மீது தேனாம்பேட்டையில் வைத்து சம்போ செந்திலின் ஆதரவாளர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கூட்டாளி சி.டி.மணியுடன் தப்பிய காக்கா தோப்பு பாலாஜியை 2021 ஆண்டு ஆயுத தடுப்புச்சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த காக்கா தோப்பு பாலாஜி தலைமுறை வாக இருந்து கொண்டே சென்டரல் ரயில் நிலையங்களில் ஆட்டோ ஸ்டேன்டில் மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப் பட்டுள்ளதாகவும், அவன் பலரிடம் மாமூல் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின்னர், 2ஆவது என்கவுண்டர் இதுவாகும்.
அதே நேரத்தில் 3 கொலை வழக்குகளில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி திருந்தி வாழ்ந்து வந்தாகவும், ஆனால் போலீசார் திட்டமிட்டு சுட்டு கொலை செய்துள்ளதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.