அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது
Published : Sep 16, 2024 10:09 AM
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது
Sep 16, 2024 10:09 AM
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணம் வெஸ்ட் பாம் பீச்சில் தமக்குச் சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் டொனால்டு டிரம்ப் விளையாடிக்கொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகவும், மைதானத்தில் இருந்த புதரில் ஏகே 47 ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாகவும் டிரம்ப்பின் மகன் தகவல் வெளியிட்டுள்ளார்.
டிரம்ப்புக்கு 450 மீட்டர் தொலைவில் துப்பாக்கியுடன் தென்பட்ட நபர் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதாகவும், காரில் தப்பிச் செல்ல முயன்ற ரயான் வெஸ்லி ரூத் என்பவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துக்குப் பிறகு தனது ஆதரவாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், இதுபோன்ற மிரட்டல்களுக்கு அடிபணியமாட்டேன் என்றும், இலக்கை அடையும் முயற்சியில் என்னை யாரும் தடுக்க முடியாது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் பாதுகாப்பாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும், அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என்றும் கமலா ஹாரிஸ் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.