கேரளாவில் திரைத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட ஹேமா கமிட்டி, தனது அறிக்கையை தாக்கல் செய்து 4 ஆண்டுகள் ஆன பிறகும், மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், மௌனமாக இருப்பது ஒரு அரசுக்கு அழகல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நாட்டிலேயே பெண்கள் அதிகம் உள்ள கேரளாவில், திரைத்துறை மட்டுமல்ல சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்க்க இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என மாநில அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு தற்போதுள்ள சட்டங்களால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், புதிய சட்டங்களை இயற்றுவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.