அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சைதாப்பேட்டை மாதிரி பள்ளியிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க சைதாப்பேட்டை, திருவொற்றியூர் காவல் நிலையங்கள், டி.ஜி.பி. அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி அமைப்பினர் புகாரளித்தனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்ற மகாவிஷ்ணு சென்னை திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் விசாரித்த போலீசார், இரு பிரிவினர் இடையே மோதலைத் தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மாற்றுத்திறனாளிகளை அவமதிப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.