சென்னை, நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தபாபுவின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தனர். அண்ணா நகரில் உள்ள ஆனந்தபாபுவின் வீட்டில் 5 மணி நேரமாக நடைபெற்ற சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சோழிங்கநல்லூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது நிலத்தை அபகரித்துக்கொண்ட கும்பலுக்கு ஆதரவாக அப்போது நீலாங்கரை ஆய்வாளராக இருந்த ஆனந்தபாபு செயல்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
ஆவணங்கள் அனைத்தும் கார்த்திக்குக்கு சாதகமாக இருந்தும், கண்களை மூடிக்கொண்டு நில அபகரிப்பு கும்பலுக்கு உதவியதாக காவல் துறையினரைக் கண்டித்த நீதிபதி, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆனந்தபாபு மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்து, அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக, பெசன்ட்நகரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிப் பெண் அதிகாரி ஹரிணி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.