பெண் டி.எஸ்.பியை நோக்கி நீண்ட கைகள்..! தடுத்த போலீசார் மீதும் கும்பலாக தாக்குதல்..! தறிகெட்ட போராட்டத்தால் பரபரப்பு
Published : Sep 03, 2024 6:00 PM
பெண் டி.எஸ்.பியை நோக்கி நீண்ட கைகள்..! தடுத்த போலீசார் மீதும் கும்பலாக தாக்குதல்..! தறிகெட்ட போராட்டத்தால் பரபரப்பு
Sep 03, 2024 6:00 PM
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகன ஓட்டுனரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மறியல் செய்ய முயன்றவர்களை தடுத்த, பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த சரக்குவாகன ஓட்டுனர் காளிக்குமார் , தனது சரக்கு வாகனத்தில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்த போது மர்மக்கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
காளிக்குமாரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டு வந்தனர்.
அப்போது அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது இளைஞர் ஒருவர் டி.எஸ்.பியை தள்ளிச்சென்றதால், டி.எஸ்.பி அந்த இளைஞனை கன்னத்தில் அறைய முயல, அவரது கையை தடுத்த அந்த இளைஞன், மீண்டும் அவரை தள்ளினான்.
இதையடுத்து அந்த இளைஞனை போலீசார் சுற்றி வளைத்த நிலையில் கூட்டத்தை பயன் படுத்தி போராட்டக்காரர்களில் காக்கி சட்டை அணிந்திருந்த ஆசாமி ஒருவர் டிஎஸ்பி காயத்ரியை தலை முடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினார்.
இதனை அருகில் இருந்த காவல் ஆய்வாளர் பார்த்து அந்த ஆசாமியின் கழுத்தில் கிடந்த துண்டை எட்டிப்பிடித்து தாக்க முயன்றார், அதற்குள்ளாக அங்கு வந்த போராட்டக்காரர்களில் ஒருவன் காவல் ஆய்வாளரை சரமாரியாக தாக்கினான்.
போலீசார் முன்னிலையில் பெண் டி.எஸ்.பிக்கு நடந்த தாக்குதலை தாக்கிக் கொள்ள இயலாமல் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு கொண்ட காவலர் ஒருவர் அந்த நபரை விரட்டிச்சென்று தாக்க முயன்றார், அதற்குள்ளாக போராட்டாக்காரர்கள் சூழ்ந்து கொண்டு அந்த காவலரையும் சரமாரியாக தாக்கினர்.
இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது டி.எஸ்.பி காயத்திரி உள்ளே புகுந்து காவலரை தாக்கிய பெண்ணை விலக்கி விட்டார். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
போராட்டக்காரர்கள் அதிக அளவில் இருந்ததால் குறைந்த அளவிலான போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. போராட்டக்காரர்கள் போலீசாரை மீறி திருச்சுழி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் அமர்ந்து பெண் டி.எஸ்.பி காயத்திரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பெண் .டி.எஸ்.பி தாக்கப்பட்ட தகவல் வெளியான நிலையில் உடனடியாக மாவட்ட எஸ்.பி கண்ணன் தலைமையில் கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். முன் விரோதம் காரணமாக காளிக்குமார் கொலைச்சம்பவம் நடந்ததாகவும், அது தொடர்பாக 4 பேர் திருச்சுழி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து போராட்டக்காரர்களை கலைந்து போகச்செய்தனர்.
அதனை தொடர்ந்து பெண்.டி.எஸ்.பி மீது தாக்குதல் நடத்திய இளைஞன் , ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேரை வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பிடித்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். தலைமுடியை பிடித்து தள்ளியதாக ஓட்டுனர் பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
துக்க நிகழ்வு என்பதால் போராடும் உறவினர்களை சமாதானபடுத்தினால் போதும் என்று குறைந்த அளவிலான போலீசாரே அங்கு பாதுகாப்புக்கு சென்ற நிலையில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது.