​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துப்பட்டாவ வீசி அபேஸ்..! மின்சார ரெயிலில் வலம் வந்த திருட்டு சகோதரிகள்..! ஓடும் ரெயிலில் கைவரிசை

Published : Sep 03, 2024 8:10 AM



துப்பட்டாவ வீசி அபேஸ்..! மின்சார ரெயிலில் வலம் வந்த திருட்டு சகோதரிகள்..! ஓடும் ரெயிலில் கைவரிசை

Sep 03, 2024 8:10 AM

சென்னையில் கூட்டமாக இருக்கும்  ரயில் பெட்டியில் புகுந்து பெண் பயணிகளின் தங்க நகைகளை பறித்துச் செல்லும் சகோதரிகள் இருவரை, மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்

தாம்பரம், செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் தங்க நகைகள், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடு போவதாக சைதாப்பேட்டை, மாம்பலம், கிண்டி போன்ற பல்வேறு ரயில் நிலைய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகின.

கடந்த 24 வருடங்களாக பயணிகளின் தங்க நகைகளை பறித்துச் செல்வது யார் ? என ரயில்வே காவல் துறையினர், ஆர்பிஎப் வீரர்கள் ஒத்துழைப்போடு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பெரிய அளவில் துப்புத் துலங்கவில்லை. அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சியால் துப்புத் துலங்கியது. ரயில் பெட்டியில், முண்டியடித்து ஏறும் பெண் பயணிகளின் மீது துப்பட்டாவை வீசி, கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அபேஸ் செய்து செல்வது தெரியவந்தது.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஏற்கனவே இதேபோன்று கைவரிசை காட்டிய பழைய குற்றவாளிகளான ஓசூரைச் சேர்ந்த சகோதரிகள் கண்மணி, ரேகா என்பது கண்டுபிடிக்கப்பட்டது . அவர்களிடம் இருந்து இந்த சம்பவத்தில் திருடிய தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

வாரத்தில் திங்கள், புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களை வழிப்பறிக்கு தேர்வு செய்ததும், ரெயிலில் ஏறும் வயதான பெண்கள் மீது துப்பட்டாவை வீசி, எந்த சந்தேகமும் இல்லாமல் ஈசியாக நகைகளைத் திருடியதாக, கைதான சகோதரிகள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சகோதரிகள் இருவரையும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மாம்பலம் ரயில்வே போலீசார், அவர் இருவரையும் சிறையில் அடைத்தனர். கூட்ட நெரிசல் மிகுந்த ரெயில்களில் தங்க நகைகளை அணிந்து செல்லும் பயணிகள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனவும் ரயில்வே போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.