பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தையொட்டி வானில் பறந்த மர்ம பொருட்கள் டிரோன்களா, அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு கடந்த திங்கள் காலை 10.10 முதல் பகல் 12.45 மணி வரை வானில் அடையாளம் தெரியாத மூன்று பொருட்கள் பறந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கும், தரை இறங்குவதற்கும் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்ட நிலையில், மர்ம பொருட்கள் மாயமானதும் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. வானில் பறந்த மர்ம பொருட்கள் டிரோன்களா, அப்படி இருந்தால் அவற்றை இயக்கியவர்கள் யார், தீவிரவாத செயலா, அல்லது வேறு என்னவாக இருக்கும் என்று விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.