போலி ஆதார் அட்டை தயாரித்து வங்கியில் வீட்டுக்கடன் வாங்க முயன்றதாக சேலத்தில் டிஜிட்டல் பிரிண்டிங் கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அம்மாப்பேட்டையை சேர்ந்த செல்வம் தனது மனைவிக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்காக தனது உறவினரான வினோத்குமார் என்பவரிடம் தனது ஆதார் கார்டு மற்றும் அவரது மனைவியின் ஃபோட்டோவை கொடுத்துள்ளார்.
ஆனால், வினோத்குமார் அதனை திருப்பிக் கொடுக்க காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பிரிண்டிங் கடைக்குச் சென்று பார்த்ததில், தனது ஆதார் கார்டை வைத்து மோசடியில் ஈடுபடுவதாக செல்வத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அங்கு சென்ற போலீசார், சோதனை மேற்கொண்டதில், செல்வத்தின் ஆதார் அட்டை முகவரியில் செந்தில் என்பவரின் போட்டோவை வைத்து புதிய ஆதார் கார்டை போலியாக உருவாக்கி வங்கியில் வீட்டு கடன் வாங்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வினோத்குமார், செந்தில் மற்றும் ஏதவ்காந்தி ஆகியோரை கைது செய்த போலீசார், மோசடிக்கு பயன்படுத்திய கணினி, பிரிண்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.