கேரளாவில் காணாமல்போன 13 வயது சிறுமியை விசாகப்பட்டினத்தில் வைத்து, சென்னை ரயில்வே போலீசார் மீட்டனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, கடந்த செவ்வாய்க்கிழமை பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் சண்டையிட்டதால், அவரது தாய் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி, திருவனந்தபுரத்திலிருந்து அசாம் செல்லும் ரயிலில் கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் ரயிலில் செல்வதாகத் தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக சென்னை ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், எழும்பூர் ரயில்வே போலீசார் சிசிடிவியை ஆய்வு செய்தனர். அதில் சிறுமி, 5வது நடைமேடையிலிருந்து 4வது நடைமேடைக்குச் சென்று ஆந்திர மாநிலம் வழியாகச் செல்லும் ரயிலில் ஏறியது தெரியவந்தது. இதனையடுத்து, விசாகப்பட்டினத்தில் வைத்து சிறுமியை மீட்டுள்ளனர்.