கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், போராட்டத்தால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதை கவனத்தில் கொண்டு மருத்துவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் 36 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்வதை நீதிமன்றம் கவனத்தில் கொள்வதாகவும், அவர்களின் பணி நேரத்தை முறைப்படுத்துவது குறித்து தேசிய பணிக் குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்றும் நீதிபதிகள் கூறினர்.
வழக்கு தாமதமாகப் பதிவு செய்யப்பட்டதற்கான சரியான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், மேற்கு வங்க மாநில அரசு மற்றும் காவல் துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.