​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழைக்கு ஒதுங்கச் சென்று பள்ளத்தில் கைக்குழந்தையோடு அடுத்தடுத்து விழுந்த 3 பெண்கள் அபாயமாகும் சாலையோர பள்ளங்கள்

Published : Aug 21, 2024 9:43 PM



மழைக்கு ஒதுங்கச் சென்று பள்ளத்தில் கைக்குழந்தையோடு அடுத்தடுத்து விழுந்த 3 பெண்கள் அபாயமாகும் சாலையோர பள்ளங்கள்

Aug 21, 2024 9:43 PM

சாத்தூரில் நெடுஞ்சாலைத்துறையால் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கையில் வைத்திருந்த குழந்தைகளோடு அடுத்தடுத்து 3 பெண்கள் விழுந்து காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரப் பகுதியில் மழைநீர் வடிந்துச் செல்லும் வகையில் வாறுகால் அமைக்கும் பணியோடு, சாலை விரிவாக்கப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் நெடுஞ்சாலை துறையினர். வாறுகாலுக்கும், சாலைக்கும் இடைப்பட்ட நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியும் கடந்த சில மாதங்களாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளுக்காகவே நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

மதுரை பேருந்து நிறுத்தம் என்ற இடத்தின் அருகே நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் முன்பு நடைபாதை பேவர் பிளாக் கற்கள் பதிப்பதற்காக கடந்த ஞாயிறன்று சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

நகரில் மாலை நேரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றன.

அப்போது, பெய்துக் கொண்டிருந்த மழைக்கு ஒதுங்குவதற்காக 3 பெண்கள் தங்களது ஒரு கையில் குழந்தையையும் மற்றொரு கையில் குடையையும் பிடித்துக் கொண்டு நகராட்சி வணிக வளாகம் நோக்கிச் சென்றனர். சாலையை அடுத்தும் தண்ணீர் தேங்கி நின்றதால் பள்ளத்தை தரையென நினைத்து கால் வைத்த பெண் ஒருவர் தனது கைக்குழந்தையோடு தண்ணீருக்குள் விழுந்தார். அவரைத் தொடர்ந்து மற்ற 2 பெண்களும் குழந்தைகளோடு அடுத்தடுத்து விழுந்து தத்ததளித்தனர்.

அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரில் விழுந்த குழந்தைகள் மற்றும் பெண்களை மீட்டனர்.

மாலையில், குழந்தைகளோடு 3 பெண்கள் விழுந்த நிலையில், இரவு நேரத்தில் ஆண் ஒருவரும் அந்த பள்ளத்தில் கால் வைத்து தண்ணீருக்குள் தவறி விழுந்தார்.

விபத்து தொடர்பான சி.சி.டி.வி பதிவு வெளியான நிலையில், பள்ளங்களை கான்கிரீட் கலவை போட்டு மூடும் பணியில் ஈடுபட்டனர் நெடுஞ்சாலைத் துறையினர்.