பங்கு சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்த ஒரு கோடி ரூபாயினை திருப்பி கொடுக்காமல், 4 ஆண்டு காலம் தாழ்த்திய விவகாரத்தில் தாய்-மகனை பெங்களூருவிற்கு கடத்தி சென்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் ஆன்லைன் பங்குச்சந்தை ஏஜென்சி நடத்தி வரும் சசிகுமாரிடம், அதிக லாபம் கிடைக்கும் ஆசையில் அவரது நண்பர்கள் திருமால், ராஜேந்திரன், முனுசாமி ஆகியோர் ஒரு கோடியே 5 லட்ச ரூபாயினை கடந்த 2021 ஆம் ஆண்டு அளித்துள்ளனர்.
இதனை பிட்காயின் டிஜிட்டல் வர்த்தகத்தில் சசிக்குமார் முதலீடு செய்து, நண்பர்கள் அளித்த முழுதொகையும் இழந்து நஷ்டம் அடைந்துள்ளார். நண்பர்கள் அளித்த பணத்தை திருப்பி தராமல் 4 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்த நிலையில், பங்குச்சந்தை தொழில் நிமித்தமாக ஒசூர் வந்த சசிகுமார், அவரது தாய் ஸ்ரீதேவியை நண்பர்கள் மூவரும் காரில் பெங்களூருவிற்கு கடத்தி சென்று, தங்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.
இதனிடையே நீண்ட நேரம் ஆகியும் மனைவி ஸ்ரீதேவியும், மகன் சசிகுமாரும் வீடு திரும்பதாதல், தந்தை மாதப்பன் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தாய்-மகனின் செல்போன் டவர் சிக்னல் மூலம், பெங்களூரு சில்க் போர்டு பகுதியில் அவர்கள் அடைத்து வைத்திருந்ததை கண்டறிந்து இருவரையும் மீட்டனர்.
கடத்தலில் ஈடுபட்ட நண்பர்கள் திருமால், ராஜேந்திரனை கைது செய்த போலீசார், தலைமறைவான முனுசாமியை தேடி வருகின்றனர்.