கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி என்.சி.சி முகாமில் மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், என்.சி.சி பயிற்றுநர் இல்லை என்பதும், என்.சி.சி என்ற பெயரில் நடத்தப்பட்ட முகாமே போலியானது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கோவையில் கைதான சிவராமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒய்வு பெற்ற சி.ஆர்.பி.எப் உதவி ஆய்வாளர் ஒருவரை என்.சி.சி கமாண்டர் என கூறி நம்ப வைத்து கேம்ப் நடத்தியதும், இதே போன்று சூலகிரியில் உள்ள 2 பள்ளிகளில் ஏற்கனவே போலி என்.சி.சி கேம்ப் நடத்தியதும் உறுதியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கந்திக்குப்பத்தில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்த முகாமில் கலந்துகொண்ட 17 மாணவிகள் அப்பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் தங்வைப்பட்டிருந்தனர்.
முகாமில் பங்கேற்ற 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன், 13 மாணவிகளுக்கு சிவராமன் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றத்தை மறைத்ததுடன், பெற்றோரிடம் எதுவும் சொல்லக்கூடாது என மாணவிகளை மிரட்டியதற்காக பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உள்பட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.