இந்தியாவில், தற்போதைய நிலவரப்படி எம்பாக்ஸ் பாதிப்பு இல்லை என்றும், நீடித்த பரவலுடன் கூடிய நோய்ப் பாதிப்பு ஏற்படும் அபாயமும் குறைவு என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் எம்பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பரவல் குறித்து பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையில் ஆய்வுக்கூட்டத்தில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், நாட்டில் குரங்கு அம்மை வைரஸ் பரவல் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருவதாக மிஸ்ரா தெரிவித்தார். நாடு முழுவதும் குரங்கு அம்மை பரவல் தொடர்பான சோதனை ஆய்வகங்களை தயார் நிலையில் வைக்கவும், நோய்த் தடுப்பு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து புதிய வகை குரங்கு அம்மை வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதையடுத்து, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.