​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்பள ரவுடிய சுடலாம்.. ஆனால் பொண்ணுன்னா.. பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்..! தன்னை அடித்தவரை மன்னித்தார்

Published : Aug 17, 2024 6:48 AM



ஆம்பள ரவுடிய சுடலாம்.. ஆனால் பொண்ணுன்னா.. பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல்..! தன்னை அடித்தவரை மன்னித்தார்

Aug 17, 2024 6:48 AM

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு காவல் ஆணையரிடம் ரிவார்டு வாங்கிய பெண் காவல் உதவி ஆய்வாளரை, தலைமுடியை பிடித்து இழுத்துபோட்டு உதைத்ததாக நேபாள பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

எஸ்.ஐ. கலைச்செல்வி ... ரவுடி ரோகித் என்பவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்ததாக கூறி அவருக்கு சென்னை காவல் ஆணையர் அருண் ரிவார்டு வழங்கி பாராட்டினார்

வழக்கமாக ரவுடிகளை ஆண் காவல் அதிகாரிகளே சுட்டுப்பிடித்ததாக கூறப்படும் நிலையில், முதன் முறையாக பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வியின் தைரியம் மிக்க செயல் காவல் துறையினர் மத்தியில் வியப்பாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 15 ந்தேதி இரவு 9 மணி அளவில் டிபி சத்திரம் காவல் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசியவர், கிருஷ்ணாபவன் ஓட்டல் எதிரே , பெண் ஒருவர் அவரது 7 வயது பெண் குழந்தையை சரமாரியாக தாக்குவதாகவும், தடுக்கச்சென்ற பெண்களையும் அடிவெளுப்பதாக கூறினார்.

இதையடுத்து எஸ்.ஐ. கலைச்செல்வி, பெண் காவலர் சுசித்ரா, காவலர்கள் சந்தோஷ்குமார், சிராஜுதீன், அசோக்குமார் ஆகியோர் காவல் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

தாக்குதல் நடத்திய நேபாள நாட்டை சேர்ந்த சீத்தா என்ற அந்த 23 வயது பெண்ணை கலைச்செல்வி தடுத்த அடுத்த நொடி, அவரது தலைமுடியை பிடித்து கீழே தள்ளி உதைத்த சீத்தா, தடுக்க வந்த காவலர்களையும் அடித்து ஓடவிட்டதாக கூறப்படுகின்றது.

போதையில் இருந்ததாக கூறப்படும் அந்தப்பெண்ணை தடுக்க இயலாமல் திணறிய போலீசார் திசைக்கு ஒரு பக்கம் சிதறிச்சென்ற நிலையில் போதை தெளிந்தவுடன் அவரை காவல் நிலையம் அழைத்து வரச்சொல்லிவிட்டு போலீசார் காவல் நிலையம் திரும்பியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து காலையில் போதை தெளிந்த நிலையில் என்ன நடந்தது என்றே தெரியாதது போல தனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் வந்திருந்தார் சீத்தா.

சீத்தாவை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். தான் தனது தந்தை வாங்கி வைத்திருந்த மதுவை அருந்தியதால் தெரியாமல் அப்படி நடந்து கொண்டதாக கூறியதோடு, குழந்தைகளின் நலன் கருதி தன் மீது நடவடிக்கை ஏதும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சீத்தா, இதையடுத்து உதவி ஆய்வாளர் கலைச்செல்வி புகார் ஏதும் அளிக்காததால், சீத்தாவை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.