அமெரிக்கா சென்றவர் பயன்படுத்தி கைவிட்ட செல்ஃபோன் எண் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் கடன் வாங்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தைச் சேர்ந்த செந்தில் குமார் அமெரிக்கா சென்ற நிலையில் அவரது செல்ஃபோன் எண் நீண்ட நாள் பயன்படுத்தப் படாததால் செயலிழந்ததாகவும், மீண்டும் விற்பனைக்கு வந்த அந்த எண்ணை ஆம்பூரைச் சேர்ந்த ராஜ்கமல் வாங்கியதாகவும் தெரிகிறது.
அந்த செல்ஃபோன் எண்ணுக்கு ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் இருந்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்ததை அடுத்து ராஜ்கமல் விசாரித்த போது, சென்னை ஆர்.ஏ.புரம் ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் செந்தில் குமார் வைத்திருந்த கணக்குடன் அந்த எண்ணை இணைக்கப்பட்டிருந்ததை அறிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, செந்தில் குமார் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்த ராஜ்கமல் வங்கியில் கடன் வாங்கியதுடன், கிரெடிட் கார்டும் பெற்று சுமார் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
ராஜ்கமல் பணத்தை திருப்பி செலுத்தாத நிலையில், தமது வீட்டுக்கு வங்கி நோட்டீஸ் வந்ததன் பேரில் செந்தில் குமாருக்கு விஷயம் தெரிய வந்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.