சிறுபான்மை கல்வி நிறுவனங்களின், ஆசிரியர் பணி நியமனத்தில், ஜாதி மத பாகுபாடின்றி தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருமண்டல கல்வி நிறுவனங்களின், ஆசிரியர் நியமனத்தில், பேராயர் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க கூடாது என்று கோரி, சி.எஸ்.ஐ திருமண்டல பொருளாளர் மனோகர் தங்கராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்இதனைத் தெரிவித்தார்.
நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலத்தில் 249 ஆரம்ப பள்ளிகள், 74 நடுநிலை பள்ளிகள், 3 உயர்நிலை பள்ளிகள், 11 மேல்நிலை பள்ளிகள், 2 கல்லூரி, 1 ஆசிரியர் பயிற்சி நிறுவனம், 2 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்வி நிறுவன ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் சம்பளத்துக்காக ஆண்டுதோறும் 600 கோடியை அரசிடம் இருந்து நெல்லை-தென்காசி திருமண்டல நிர்வாகம் பெறுகிறது.
இது தவிர, யு.ஜி.சி.யும் நிதி உதவி அளிக்கிறது. மாநில அரசின் நிதி உதவி பெறும் போது திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், நீதிபதி கூறினார்.குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, இங்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுவதாக உத்தரவிட்டார்.