கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அதனை செய்யாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உலுப்பங்குடி அருகே உள்ள ஊராளிப்பட்டி கிராமத்தில் மணிமுத்தாறு பகுதியை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மணல் எடுக்க இடைக்கால தடை விதிக்க கோரி மனு அளித்திருந்தார்.
தாடிக்கொம்பு பகுதியில் மண் அள்ளுவதற்கு பெற்ற அனுமதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி உலுப்பங்குடியில் மண் அள்ளுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை அலுவலர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.