​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவைக்கு புதிய மேயர்.. இலவு காத்த கிளிகளான கவுன்சிலர்கள் கண்ணீர்..! ஆதங்க குரலை அடக்கிய அமைச்சர்கள்

Published : Aug 06, 2024 8:48 PM



கோவைக்கு புதிய மேயர்.. இலவு காத்த கிளிகளான கவுன்சிலர்கள் கண்ணீர்..! ஆதங்க குரலை அடக்கிய அமைச்சர்கள்

Aug 06, 2024 8:48 PM

கோவை மாநகராட்சியின் புதிய மேயராக 29- வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேயர் பதவி கிடைக்கும் எனக் காத்திருந்த தி.மு.க பெண் கவுன்சிலர்கள் கண்ணீர் விட்டு அழுதும், ஆவேசமாக பேசியும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

கோவை மாநகராட்சியின் மேயர் பதவியை கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அடுத்த மேயர் தாங்கள் தான் என்று கவுன்சிலர்கள் மீனா லோகு, லட்சுமி இளஞ்செல்வி, சாந்தி முருகன்ஆகியோர் எதிர்பார்ப்பில் காய்களை நகர்த்தி வந்தனர். காளப்பட்டியில் நடந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி தலைமையிலான கூட்டத்தில் 29 வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி பெயர் புதிய மேயர் என்று அறிவிக்கப்பட்ட போது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது மீனா லோகு கண்ணீர் விட்டு அழுதபடியே அங்கிருந்து புறப்பட்டார்.

மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு முன்னதாக தனியார் பள்ளி கூடத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி தலைமையில் கவுன்சிலர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் கவுன்சிலர் சாந்தி முருகன் எழுந்து ஆதங்கத்தை கொட்டினார்.

இதையடுத்து புலம்பி அழுதபடியே வெளியில் வந்த சாந்திமுருகனை சக பெண் கவுன்சிலர்களும், அவரது கணவரும் தோளில் தட்டி சமாதானப்படுத்தினர்.

அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முற்பட்டபோது, அமைச்சர்கள் இருக்கிறார்கள் பேசவேண்டாம் என்று விடாமல் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து மறைமுக தேர்தலில் கோவை மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, செங்கோல் வழங்கி மேயர் நாற்காலியில் அமைச்சர்கள் அமர வைத்தனர். அப்போது தி.மு.க கவுன்சிலர்கள் வேறு வழியின்றி சோகம் தோய்ந்த முகத்துடனே சென்று கோவையின் 2ஆவது பெண் மேயரான ரங்கநாயகிக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினர்.