அரசு போஸ்டரில் ஜெயலலிதாவா..? ஆட்சி மாறி 3 வருடமாகிறது.. ஆவேசமான அமைச்சர் மா.சு..! தலைமை மருத்துவர் பணியிட மாற்றம்
Published : Aug 06, 2024 7:20 PM
அரசு போஸ்டரில் ஜெயலலிதாவா..? ஆட்சி மாறி 3 வருடமாகிறது.. ஆவேசமான அமைச்சர் மா.சு..! தலைமை மருத்துவர் பணியிட மாற்றம்
Aug 06, 2024 7:20 PM
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு சி.டி.ஸ்கேன் அறை கொரானா காலத்திற்கு பின்னர் சுத்தம் செய்யப்படவில்லை என்பதை அறிந்து மருத்துவமனையின் தமைமை மருத்துவரை இடமாற்றம் செய்தார்.
ஆட்சி மாறி 3 வருடமாகிறது இன்னும் பழைய சி.எம். படத்தோட போஸ்டர் ஒட்டி இருக்கீங்க... ஆட்சி மாறுனதே தெரியலன்னா உங்களதான் மாற்றனும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆவேசமான இடம் பரமக்குடியில் உள்ள அரசு பொது மருத்துவமனை.
மருத்துவமனைக்கு காலையில் திடீர் ஆய்வுக்கு சென்ற அமைச்சர், அந்த மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்தார்.
மகப்பேறு மருத்துவமனையின் உள்பகுதியில் பல இடங்களில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா படத்துடன் மக்கள் நல்வாழ்வுத்துறையின் போஸ்டர்கள் காணப்பட்டது. இதனை கண்டதும் , ஆவேசமான அமைச்சர் ஆட்சி மாறி 3 வருடமாகிறது தெரியுமா ? என்று தலைமை மருத்துவரை கடிந்து கொண்டார்.
தொடர்ந்து சி.டி.ஸ்கேன் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு பழைய அட்டை பெட்டிகள், பேப்பர்கள் என குடோன் போல காணப்பட்டது. எப்போது கடைசியாக பயன் படுத்தப்பட்டது என்று விசாரித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன். விசாரணையில் கொரோனா காலத்துக்கு பின்னர் அந்த அறை சுத்தம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து கூடுதல் மருத்துவமனை கட்டிட பணிகளை பார்வையிட்டு அதனை விரைவாக கட்டி முடிக்க அறிவுறுத்திய அமைச்சர், ஒப்பந்ததாரரை செல்போனில் அழைத்து பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் பிளாக் லிஸ்டில் வைக்க பரிந்துரைப்பேன் என்று எச்சரித்தார்.
பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7.15 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனையை முறையாக பராமரிக்காமல் வைத்திருந்ததாக பரமக்குடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரை இடமாற்றம் செய்திருப்பதாக தெரிவித்தார்