விஷால்.. தனுஷ் ..அடுத்து யார் ? பூனைக்கு மணி கட்டிய பின்னணி தயாரிப்பாளர் சங்கம் கிடுக்கிப்பிடி ஏன்..? ரசிகர்கள் சுட்ட வசூல் வடைகளால் சிக்கல்
Published : Jul 30, 2024 6:24 AM
விஷால்.. தனுஷ் ..அடுத்து யார் ? பூனைக்கு மணி கட்டிய பின்னணி தயாரிப்பாளர் சங்கம் கிடுக்கிப்பிடி ஏன்..? ரசிகர்கள் சுட்ட வசூல் வடைகளால் சிக்கல்
Jul 30, 2024 6:24 AM
நடிகர்கள் விஷால், தனுஷ் ஆகியோரை வைத்து படம் தயாரிக்க விரும்புவோர், தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில் நடிகர் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் சுட்ட வசூல் வடைகளால் தெருவுக்கு வந்த நாயகர்களின் பஞ்சாயத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
தமிழ் திரை உலகின் முன்னனி நடிகர்களில் ஒருவரான விஷாலை தொடர்ந்து, நடிகர் தனுஷுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமியிடம், நடிகர் தனுஷ் தனது 37-வது படத்தை இயக்கி நடித்து தருவதாக கூறி சில கோடிகளை முன்பணமாக பெற்றுள்ளார். இத்தனை ஆண்டுகளாக படம் நடித்துக் கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதால் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரின் பேரில் தங்களிடம் அனுமதி பெறாமல் தனுஷை படங்களில் நடிக்க வைக்க வேண்டாம் என்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் நடிகர் நடிகைகளின் சம்பளம், மற்றும் கட்டுப்படுத்த இயலாத சினிமா செலவினங்களால், தமிழ் சினிமாக்களின் படப்பிடிப்பையும் நவம்பர் 1ந்தேதி முதல் நிறுத்துவதாகவும் அறிவித்தனர்.
தங்களிடம் கலந்தாலோசிக்காமல் எப்படி ஸ்டிரைக் அறிவிப்பது என்று கூறியுள்ள நடிகர் சங்கத்தினர், நடிகர்கள் மீதான தடைக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவரித்த தயாரிப்பாளர் ஒருவர், ரசிகர்கள் சுட்ட வசூல் வடைகளை நம்பி தங்கள் சம்பளத்தை இஷ்டத்துக்கு ஏற்றி உள்ள முன்னணி நடிகர்கள் தான் என்று சுட்டிக்காட்டினார். அந்த நடிகர்கள் படப்பிடிப்புக்கு எப்போதும் 10 பேரை உதவிக்கு அழைத்து வந்து அவர்களுக்கும் சேர்த்து தயாரிப்பாளரிடம் தினமும் சில லட்சங்களை வாங்கிக் கொள்கின்றனர் என்றும் இதனால் தயாரிப்புச்செலவு கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு உயர்ந்து விடுகின்றது என்றார். முன்பு போல ஓடிடி மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் கோடிகளுக்கு விலை போவதில்லை என்றும் விஜய்யின் கோட் படத்தையே, படம் வெளியான பின்னர் ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து வாங்குவதாக கூறி பிரபல ஓடிடி நிறுவனங்கள் கூறிவிட்டதாகவும், தெரிவித்த அவர், ஏராளமான படங்களை ஷேரிங் அடிப்படையில் வேண்டுமானால் ஓடிடியில் திரையிடுகிறோம் என்று கூறி தவிர்ப்பதாக வேதனை தெரிவித்தார்.
இந்த நிலவரம் தெரியாமல் விஜய் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நிலையில், போட்டியாளரான அஜீத் 180 கோடி ரூபாய் வரை கேட்பதாகவும், அதுவும் அட்வான்சாக மட்டும் 50 சதவீதம் பணம் கொடுத்து விட வேண்டும் என்றும் கூறுவதால் தயாரிப்பாளர்கள் விழிபிதுங்குவதாக கூறப்படுகின்றது . சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு ஆகியோர் 50 கோடி ரூபாய்க்கு மேல் கேட்பதாக கூறப்படுகின்றது. சூர்யாவும், கார்த்தியும் 35 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை சம்பளத்தை நிர்ணயித்துக் கொண்டிருப்பதால் , இவர்களை வைத்து ஒரு படத்தை தயாரிக்க 100 கோடி ரூபாய்க்கு குறையாமல் பணம் தேவைப்படுகின்றது என்றார்
இப்போது திரையரங்க வருமானம் மட்டுமே முக்கியமாக உள்ளது. அதனால் சம்பளத்தை குறைக்க சொன்னால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நடிகர் சங்கம், இப்போது கண்டனம் தெரிவிப்பது எப்படி சரியாக இருக்கும் ? என்றும் தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தனுஷ் வரிசையில் அடுத்ததாக வேல்ஸ் பிலிம்சிடம் பெற்ற 10 கோடிக்காக சிம்பு மற்றும் உத்தமவில்லன் நட்டத்திற்கு திருப்பதி பிரதர்ஸுக்கு படம் செய்து தருவதாக உறுதி அளித்த கமல் ஆகியோரின் பெயர்களும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.