டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளநீர் புகுந்ததில் 2 மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ராஜேந்திரநகர் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் அடித்தளத்தில் ராவ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. நேற்று மாலை டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பயிற்சி மையத்திற்குள் திடீரென வெள்ளநீர் புகுந்தது.
அப்போது அங்கு படித்துக் கொண்டிருந்த சுமார் 30 மாணவ-மாணவிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு கட்டடத்தின் அடித்தளத்தில் தேங்கியிருந்த மழைநீரை முழுமையாக அகற்றினர்.
கட்டடத்தின் உள்ளே உயிரிழந்த நிலையில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டன. கட்டத்தில் இருந்த மற்ற மாணவ-மாணவிகள் மீட்கப்பட்டதாத் தெரிவித்த போலீசார், எந்தவித பாதுகாப்பு முறையும் இல்லாமல் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டதாகத் தெரிவித்தனர்.
கட்டட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களும் பொதுமக்களும் நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.