மும்பை மற்றும் புனே நகரங்களில் கனமழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்தனர். மும்பையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான நிலையில் புனேவின் பர்வி அணை நீரில் மூழ்கி 3 பேர் பலியாகினர்.
சான்டாக்ரூஸ் பகுதியில் 9 மணி நேரத்தில் 12 சென்டி மீட்டர் மழை பெய்தது. மும்பை மெரைன் ட்ரைவ், ஜுஹு கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.
மழையால் பல விமானங்கள் தாமதமான நிலையில், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழை வெள்ளம் காரணமாக 80 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. புனேவின் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. உள்ளே சிக்கியவர்களை ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு முகாம்களுக்கு அனுப்பினர்.
லவாசா நகரில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சொகுசு பங்களாக்கள் மண்ணில் புதைந்த நிலையில், மீட்புப் பணியில் NDRF வீரர்கள் ஈடுபட்டனர். மும்பை மற்றும் பல்கார் நகரங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.