​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடன் ரூ 30 லட்சத்துக்கு.. வட்டி ரூ 80 லட்சம் வசூல் கந்து வட்டி அஞ்சலை கைது..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வட்டி பணம் விநியோகம்..?

Published : Jul 26, 2024 6:25 AM



கடன் ரூ 30 லட்சத்துக்கு.. வட்டி ரூ 80 லட்சம் வசூல் கந்து வட்டி அஞ்சலை கைது..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வட்டி பணம் விநியோகம்..?

Jul 26, 2024 6:25 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் தாதா அஞ்சலை, வட்டிக்கு 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து மிரட்டி 80 லட்சம் ரூபாய் வட்டி வசூலித்த புகாரில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 17 வதாக மணலி அடுத்த மாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் சிவா என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 9 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

வழக்கறிஞர் ஹரிஹரனிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில் சிவா கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமு ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொலைக்கு கூலியாக 10 லட்சம் ரூபாய் வரை வழங்கியதாக கைது செய்யப்பட்ட பெண் தாதா அஞ்சலைக்கு பணம் எப்படி வருகின்றது ? என்று விசாரித்த போது, கஞ்சா விற்பனை, கந்து வட்டி உள்ளிட்டவை மூலம் அவர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. அந்தவகையில் கடந்த ஆண்டு புளியந்தோப்பை சேர்ந்த கேட்டரிங் உரிமையாளர் முகமது அசாருதீன் என்பவருக்கு அஞ்சலை நேரடியாக 9லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கொடுத்துள்ளார், தனது மகள் சங்கீதா மூலம் 11 லட்சம் ரூபாயும், திரு நங்கை அலினா என்பவர் மூலம் 10 லட்சம் ரூபாயும் வட்டிக்கு கொடுத்துள்ளார்.

இதற்கு வட்டியாக மட்டும் 80 லட்சம் ரூபாய் வரை முகமது அசாருதீன் திருப்பி செலுத்திய நிலையில் மேலும் பணம் கேட்டு அவரை அஞ்சலை மிரட்டுவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து போலீசார் நடத்தினர். விசாரணையில் அமுகமது அசாருதீனிடம் கடனாக பணம் கொடுத்து 30 சதவீதம் முதல் வட்டிக்கு வட்டி போட்டு, கந்து வட்டிக்கு கேட்டு அஞ்சலை மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஞ்சலையை மீண்டும் கந்துவட்டி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். கொலை வழக்கில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ரவுடி சீசிங் ராஜாவை இருக்கும் இடத்தை கண்டறிவதற்காக அவரது உறவினர்களை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். இதுவரை இந்த கொலை வழக்கில் அருள், மலர்கொடி, ஹரிஹரன், ஹரிதரன்,சிவா உள்ளிட்ட 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் சிவகுருனாதன் மீது காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.