​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“பிசிறு தட்டாம காரியத்த முடிக்கனும்” VPN காலில் சம்போ செந்தில் TALK சொன்னதெல்லாம் உண்மையா? போலீஸ் விசாரணையில் பகீர்

Published : Jul 24, 2024 6:27 AM



“பிசிறு தட்டாம காரியத்த முடிக்கனும்” VPN காலில் சம்போ செந்தில் TALK சொன்னதெல்லாம் உண்மையா? போலீஸ் விசாரணையில் பகீர்

Jul 24, 2024 6:27 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பவம் செந்திலின் பங்கு என்ன என்பது குறித்து ?வழக்கறிஞர் ஹரிகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பொன்னை பாலு வழக்கறிஞர்கள் அருள், ஹரிகரன், மலர்கொடி, பெண் தாதா அஞ்சலை உள்ளிட்ட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞரான ஹரிஹரனை போலீசார் முக்கியமான நபராக கருதுகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் கூலிப்படைக்கும் கொலை செய்ய பின்னணியில் இருந்து தூண்டியவர்களுக்கும் தரகராக செயல்பட்டு பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது வரை அனைத்து சதி செயல்களுக்கும் ஹரிஹரன் தான் கூட்டு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலையின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என ஹரிஹரனை விசாரித்தால் உண்மை புலப்படும் என்பதால் அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். விடிய விடிய அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார் என போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கொருக்குப்பேட்டை நைனி அப்பன் தெருவை சேர்ந்த 28 வயது இளைஞரான ஹரிகரன் இவர் கடந்த 3 ஆண்டுகளாக வழக்கறிஞராக உள்ளார். இவர் வழக்கறிஞராக பணியாற்றுவதற்கு முன்பு தா.மா.க. கட்சியில் வடசென்னை மேற்கு பகுதியில் மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவராகவும், வழக்கறிஞரான பின்னர் மாணவர் அணியின் மாநில தலைவராக இருந்துள்ளார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

முன்னதாக ஆம்ஸ்ட்ராங்கை உளவு பார்க்க திருச்சியில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாட்டில் ஹரிஹரன் தனது சகாக்களுடன் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழி வாங்க தான் இந்த கொலை நடந்துள்ளது என்று போலீசார் விசாரணையை முடித்து விடுவார்கள், பின்னணியில் இயங்கிய தனது பக்கம் வரை விசாரணை நீளாது என்று நினைப்பில் கொலைச் சம்பவம் நடந்த பிறகும் கூட தலைமறைவாகாமல் வழக்கமான நடவடிக்கையில் ஹரிஹரன் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த பந்தர் கார்டன் மைதானத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்ற போது அந்தக் கட்சியில் மாணவர் அணி தலைவராக இருந்த ஹரிஹரனும் உடன் சென்றதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவம் என்கிற சம்போ செந்திலுக்கும், வழக்கறிஞர் ஹரிகரனுக்கும் பத்தாண்டு கால பழக்கம் எனவும், ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ததன் விவரம் குறித்தும் ஹரிஹரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வெவ்வேறு எண்களில் இருந்து விபிஎன் , இன்ஸ்டா, whatsapp call களில் மட்டுமே தொடர்பு கொண்டு, ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரான நபர்களை ஒருங்கிணைத்ததாகவும், கொலையை எந்த பிசிறும் இல்லாமல் கச்சிதமாக செய்ய வேண்டும் என சம்போ செந்தில் அவ்வபோது ஆலோசனைகளை வழங்கியதாகவும் ஹரிஹரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்போ செந்தில் தரை வழியாக அடிக்கடி நேபாளம் சென்று தங்குவதாக கூறப்படும் நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் அவர் எங்கெங்கு தங்குவார்? அங்கிருந்தபடியே, சதித்திட்ட ஆலோசனைகளை எப்படி வழங்கினார் ? என்பது குறித்து ஹரிஹரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்போ செந்திலுக்கு பக்கபலமாக இருக்கும் அரசியல் பெரும்புள்ளிகள், தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், தற்போது பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த கொலை வழக்கில் சிக்கிய முக்கிய புள்ளியை ஆந்திர எல்லையில் உள்ள தமிழக காவல் நிலையம் ஒன்றில் வைத்து தனிப்படை விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.