காதல் நிக்காஹ்.. மருமகனுக்கு ஸ்கெட்ச் போட்ட காதலி குடும்பம்..! கூலிப்படை ஏவி காலி செய்தனர்
Published : Jul 23, 2024 6:14 AM
காதல் நிக்காஹ்.. மருமகனுக்கு ஸ்கெட்ச் போட்ட காதலி குடும்பம்..! கூலிப்படை ஏவி காலி செய்தனர்
Jul 23, 2024 6:14 AM
காதல் திருமணம் செய்த மருமகனுக்கு தொழில் அமைத்துக்கொடுப்பது போல நடித்து, அவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக காதல் மனைவியின் தாய், தந்தை, சித்தி உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
காதல் திருமணம் செய்ததால் மனைவியின் குடும்பத்தினரால் கவுரவ கொலை செய்யப்பட்ட ஹசனைய்யா இவர் தான்..!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த பத்தளப்பள்ளி என்னுமிடத்தில் ஆந்திராவை சேர்ந்த ஹசனய்யா என்பவர் ஆண்கள் தங்கும் விடுதி ஒன்றை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார். விடுதி தொடங்கிய 4 வது நாளில் அவர் தங்கி இருந்த அறையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மருமகனை , மாமனாரே கூலிப்படை ஏவி கொலை செய்த
பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆந்திராவின் நந்தியால் மாவட்டத்தை சேர்ந்த ஹசனய்யா என்பவர் அதே பகுதியை சேர்ந்த பிரம்பீவி என்ற இளம் பெண்ணை 21 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பெண்ணின் வீட்டில் வசதி அதிகம் என்பதால் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் மகளின் ஆசைக்காக மருமகனை ஏற்றுக் கொண்டது போல நடித்து தங்கள் வீட்டிலேயே தங்கி இருக்க செய்ததாக கூறப்படுகின்றது.
கடந்த 1 1/2 வருடமாக ஹசனையாவை கொலை செய்ய பல முறை முயன்றும் மகளின் முகத்தை பார்த்து இரக்கப்பட்டு கொலை செய்யும் திட்டம் தள்ளிப்போய் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. இதற்கிடையே இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததால் ஹசனையா மீது கோபம் இன்னும் அதிகரித்துள்ள்ளது. ஹசனையாவை கொலை செய்து விட்டு , தனது மகளுக்கு தங்கள் தகுதிக்கு நிகரான செல்வ செழிப்புள்ள பையனை பார்த்து 2 வது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல லட்சம் செலவழித்து தமிழகத்தின் பத்தளப்பள்ளியில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றை மருமகன் ஹசனையாவுக்கு லீசுக்கு எடுத்து கொடுத்துள்ளனர் மனைவியின் குடும்பத்தினர். ஹசனய்யாவின் மாமனார், மாமியார் பீரம்மா, சின்ன மாமியார் மாதேவி ஆகியோர் கொலைக்கு திட்டம் வகுத்த நிலையில் , மாதேவி தனது காதலானான சீனிவாசலு என்ற ரவுடி தலைமையிலான கூலிப்படையை அனுப்பி வைத்துள்ளார்.
தங்கும் விடுதி திறந்த நாள் முதல் 4 நாட்களாக அங்குள்ள அறையில் தங்கி இருந்த கூலிப்படையினர் சம்பவத்தன்று ஹசனய்யாவை கொலை செய்து விட்டு தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த கவுரவ கொலை விவகாரத்தில் ஹசனய்யாவின் மாமனார் காதர் வல்லி, மாமியார் பீரம்மா, சித்தி மாதேவி, கூலிப்படை தலைவர் சீனிவாசலு உள்ளிட்ட 8 பேரை போலீசார் ஆந்திராவில் கைது செய்து ஓசூர் அழைத்து வந்தனர். இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மருமகனை யாரோ கொலை செய்து விட்டனர் என்று குடும்பமே அழுது நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.